Actor Soori: வெண்ணிலா கபடிக்குழு முதல் கொட்டுக்காளி வரை - சூரி என்னும் பன்முக நடிகரின் கதை!
Actor Soori: வெண்ணிலா கபடிக்குழு முதல் கொட்டுக்காளி வரை - சூரி என்னும் பன்முக நடிகரின் கதையை அவரது பிறந்தநாளை ஒட்டிப் பார்ப்போம்.
Actor Soori: வெண்ணிலா கபடிக்குழு என்னும் படத்தில் ஒரு காட்சியில் பரோட்டா கடையினர் நடத்தும் போட்டியில், ஒருவர் சொன்ன 50 பரோட்டக்களை சாப்பிட்டு முடித்திருப்பார். ஆனால், அந்த கடை ஊழியர் குறிப்பிட்ட அளவு பரோட்டா சாப்பிடவில்லை என்று அவரை ஜெயிக்கவிடாமல் செய்வார்.
ஆனால், அப்போதும் அசராத அந்த நபர், மறுபடியும் முதலில் இருந்து பந்தயத்தை துவங்குவதாக கடை ஊழியரிடம் தகராறு செய்வார். அந்த காமெடி தந்த அடையாளத்தால் தமிழ்நாட்டில் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தவர் தான், நடிகர் சூரி.
அந்தக்காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் சூரி கூறியிருப்பார். அவரின் அந்த மெனக்கெடல்தான் அவருக்கு இன்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி தந்துள்ளது.
அதற்குப் பின் வந்த படங்களில் எல்லாம் கதாநாயகர்களுடன் வரும் காமெடி நண்பர் ஆனார், சூரி. குறிப்பாக, சிவகார்த்திகேயன் - சூரி காம்பினேஷனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, இருவரும் சேர்ந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்டப் படங்கள் இருவருக்கும் நீங்காப் புகழை பெற்றுக்கொடுத்தன. மறுபக்கம் விமலுடன் சேர்ந்து களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என நடித்து கிராமங்களில் எல்லாம் ரீச் ஆனார், நடிகர் சூரி.
அடுத்து காமெடி நடிகர்களாக விஷால்,கார்த்தி,சசிக்குமார் என நடித்து வந்த சூரி திடீரென விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உச்ச நடிகர் படங்கள் வரை நடித்து காமெடி நடிகராகப் புகழ்பெற்றார்.
நடிகர் சூரியின் பின்புலம் என்ன?
சூரியின் உண்மை பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி. 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி மதுரையில் பிறந்தார். பரோட்டா காமெடியில் நடித்து புகழ்பெற்றதால் பரோட்டா சூரி என்ற அடையாளமும் உள்ளது. 1996ம் ஆண்டு சூரி மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னை வந்த அவர், தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள பணம் வேண்டும் என்பதற்காக கிளீனர் வேலையை செய்தார். இவர் வின்னர் போன்ற படங்களில் காமெடி நடிகர்களுடன் துணை நடிகராக மிகச்சிறிய வேடங்களில் தான் முதலில் நடிக்கத் துவங்கினார்.
பின்னர் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, முக்கிய மற்றும் பிரபல காமெடி நடிகர் ஆனார். வட்டார மொழியுடன் கூடிய யதார்த்தமான இவரின் காமெடிகள் மக்களை கவர்வதாக இருந்தன. அதுவே இவருக்கு அதிகப் புகழையும் பெற்று தந்தது. காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கினார். இவரது காமெடிகள் பல மீம்கள் தயாரிக்க உதவியது.
பாண்டிய நாடு, ரஜினி முருகன், ஜில்லா, சாமி 2, வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சியில் நன்கு ஸ்கோர் செய்திருப்பார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மிகப்பிரபலமானது.
வெற்றிமாறன் தந்த கதையின் நாயகன் வாய்ப்பு:
இதற்கிடையே இயக்குநர் வெற்றிமாறன், சூரியை வைத்து படமெடுக்க ஆசைப்பட அவரின் படத்தில் நடிப்பதற்காக நிறைய காமெடி படங்களில் நடிக்காமல் தவிர்த்தார். அதன்பின், இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை- பாகம் 1’ படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஆண்டுகளை ஒதுக்கி நடித்துக்கொடுத்தார். சூரியின் உழைப்புக்குப் பயன் கிடைக்கும் வகையில் ‘விடுதலை- பாகம் 1’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி, நடிகர் சூரியை கதையின் நாயகன் ஆக்கியது. அடுத்து சூரி முதன்மைப் பாத்திரத்தில் நடித்த கருடன் மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது வெளியாகிய ‘கொட்டுக்காளி’ படமும் சூரிக்கு நல்ல பெயரைப்பெற்றுத்தந்துள்ளது.
சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து, சினிமா ஆசையில் சென்னை வந்து தன் உழைப்பால் கதையின் நாயகனாக முன்னேறிய நடிகர் சூரியை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறது.