28 Years of SathiLeelavathi: பிடிக்காத மனைவியை மணம்புரிந்த கணவரின் சபலமும்.. படம்நெடுக காமெடியும்!
சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி 28ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது தொடர்பான சிறப்புக்கட்டுரையினைக் காணலாம்.
கடந்த 1995ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியான நகைச்சுவைத் திரைப்படம், சதி லீலாவதி. இப்படத்தில் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, கல்பனா, ஹீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்குண்டான வசனங்களை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். இசையை இளையராஜாவும், இயக்கம் - ஒளிப்பதிவு - எடிட்டிங்கினை பாலுமகேந்திராவும் செய்திருந்தார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் ஹிந்தியிலும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் டப்பிங் செய்து வெளியானது.
இப்படத்தில் அருணாசலம் என்னும் அருண் ஆக ரமேஷ் அரவிந்தும்; லீலாவதி என்கிற குண்டாஸ் ஆக கல்பனாவும் நடித்துள்ளனர். பிரியதர்ஷினி என்கிற பிரியாவாக ஹீராவும், சக்திவேல் கவுண்டராக கமல்ஹாசனும், பழனியம்மாள் சக்திவேல் கவுண்டராக கோவைசரளாவும் நடித்துள்ளனர்.
சதி லீலாவதி படத்தின் கதைக்கரு என்ன? அருண் என்பவர் வீட்டில் பெரியவர்களின் வற்புறுத்தலால் லீலா என்கிற லீலாவதியை மணக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே லீலாவதியின் எடை, அருணுக்கு மனதளவில் பிரச்னையாக இருக்கிறது. இதனால் பிரியா என்னும் அழகான பெண்ணை பார்த்து, தனக்கு திருமணம் ஆனதை மறைத்து காதலிக்கிறார்.
பிரியாவை விடுமுறைக்கு பெங்களூரு அழைத்துச் செல்லும்போது அருண், விமானத்தில் தனது பால்யகால நண்பனான டாக்டர் சக்திவேல் கவுண்டரை பார்த்துவிடுகிறார். சக்திவேல் கவுண்டரோ, தனது மனைவி பழனி மற்றும் மகனுடன் பயணிக்கிறார்.
அதேபோல் அருண் தங்கும் அதே ஹோட்டலில் சக்திவேல் கவுண்டரும் யதார்த்தமாக தங்குகிறார். அப்போது அருண், பிரியாவுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பதைக் கண்டறிந்துவிடுகிறார்.
அதேபோல் பிரியாவும், அருண் முன்பே திருமணம் ஆனவர் என்பதைக் கண்டறிந்துவிடுகிறார். ஆனால், அருண் தான் விவாகரத்து செய்துவிட்டு உன்னுடன் வாழ நினைப்பதாகச் சொல்லி, பிரியாவை சமாதானம் செய்கிறார்.
அதேபோல் அருணின் மனைவி லீலாவதியும் அருணின் திருமணத்தைத் தாண்டிய உறவினைக் கண்டறிகிறார். பின் பல்வேறு நாடகங்களை நடத்தி பிரியா அருணை வெறுக்கும் அளவுக்கும், லீலாவதி சதி செய்கிறாள். இறுதியில் லீலாவதி தன் கணவருடனும் பிரியா அவரது முன்னாள் காதலருடனும் இணைகின்றனர்.
இப்படத்துக்குண்டான அனைத்து பாடல்களையும் வாலி, இளையராஜாவின் இசையில் எழுதியிருப்பார். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த படங்களிலேயே இப்படம் மிக காமெடியானது. இப்படத்தில் நடித்ததற்காக கோவை சரளா, மாநிலத்தின் சிறந்த காமெடி நடிகை என்னும் விருதினைப் பெற்றார். இப்படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதேபோல், தெலுங்கிலும் டப் செய்துவெளியிடப்பட்டு ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்