45 years of Kuppathu Raja: சாமானியர்களின் கதை.. ஸ்டைலில் கலக்கிய ரஜினி.. மாறுபட்ட கதைக்களத்தில் ஈர்த்த குப்பத்து ராஜா
குப்பத்து ராஜா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
1979ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம், குப்பத்து ராஜா. இப்படத்தில் ரஜினிகாந்த், பத்மப்பிரியா, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்குண்டான இசையை எம்.எஸ்.விஸ்வநாதன் செய்திருந்தார்.
குப்பத்து ராஜா படத்தின் கதைக்கரு என்ன? தனது இளைய சகோதரியின் கல்யாணத்துக்காக திருடும் ஜக்கு என்கிற ஜெயக்குமார், அந்தப் பணத்தை ஒரு வீட்டின் கதவைத் தட்டி, விஷயத்தைச் சொல்லி, தனது வீட்டில் கொடுத்துவிடச் சொல்கிறான்.
பின் அவன் மறைந்து இருந்த இடத்தை அறிந்து அவனைக் கைது செய்கிறது காவல் துறை. ரிலீஸுக்குப் பின் வெளியில் வரும் ஜக்குவுக்கு அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது. என்னவென்றால், கல்யாணம் செய்ய பணமில்லாத வேதனையில் ஜக்குவின் அம்மா மாரடைப்பால் உயிரிழந்திருப்பார். அவரது தங்கை தற்கொலை செய்துகொண்டிருப்பாள். இச்செய்தியை நண்பன்மூலம் அறிந்த ஜக்கு, தான் போலீஸில் சிக்குவதற்கு முன்பு, பணம் கொடுத்துவிட்டுச் சென்ற வீட்டுக்குச் சென்று, தான் யாரிடம் பணம் கொடுத்தாரோ அவரைக் கொல்லுகிறான். அவரது மகளை விலைமாந்தர் விடுதியில் சேர்க்கிறான். இதை தாமதமாக அறிந்த டாக்ஸி டிரைவரும் கொல்லப்பட்டவரின் மகனுமான செல்வம் ஜக்குவை பழிவாங்க நினைக்கிறான். ஆனால், மறுபுறம் ஜக்குவும் செல்வத்தைக் கொல்ல முகம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறான்.
விதியின் விளையாட்டில் செல்வமும் ஜக்குவும் நண்பர்களாகிவிடுகின்றனர். ஒரு நாள் அந்த ஏரியாவில் இருக்கும் பெரும் பணக்காரன் அருகில் இருந்த குப்பத்து மக்களை காலி செய்ய சொல்கிறான். ஆனால், ஜக்கு அதனை மறுக்கிறார். அதைக் காலிசெய்ய மறுத்து அவனது வீட்டிலேயே கொள்ளையடித்து வந்து, பணக்காரனிடம் தங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என நல்லவன் போல் பணம் கொடுக்கிறான். இதனையடுத்து பெரும்பணக்காரனுக்கு ஜக்குதான் செல்வத்தின் அப்பாவைக் கொன்றது தெரியவருகிறது.
மேலும் அந்த பணக்காரன் செல்வத்தின் தங்கையிடம், ஜக்குவை காட்டிக்கொடுக்கிறான். இதனால் ஆத்திரமுற்ற செல்வமும் அவரது தங்கையும் ஜக்குவைப் பார்க்க காத்திருக்கிறான். அப்போது தங்களது அப்பா, தான் கொடுத்த பணத்தை சரியான நேரத்தில் தனது அம்மாவிடம் கொடுக்காததால் தனது தங்கையின் திருமணம் நடக்கவில்லையென்றும், அதனால் தனது தங்கையும் அம்மாவும் உயிரிழந்துவிட்டனர் எனும் கதையைச் சொல்கிறான். இதனால் மனம்மாறும் செல்வமும் அவரது தங்கையும் ஜக்கு என்கிற ஜெயக்குமாரை மன்னித்துவிடுகின்றனர். இறுதியில் போலீஸ் ஜக்குவை கைது செய்கிறது. போகையில், செல்வத்தின் தங்கையை தான் திருமணம் செய்துகொள்வதாக உறுதிகொடுத்துவிட்டு ஜெயிலுக்குச் செல்கிறான், ஜக்கு.
இப்படத்தில் ஜக்கு என்கிற ஜெயக்குமாராக ரஜினிகாந்தும், செல்வமாக விஜயகுமாரும் நடித்து இருந்தனர். செல்வத்தின் காதலி மைனாவாக மஞ்சுளா விஜயகுமாரும்; கஸ்தூரியாக பத்மப்பிரியாவும் நடித்திருந்தனர். மேலும், இப்படத்தில் எஸ். ஏ. அசோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, சிஐடி சகுந்தலா, லூஸு மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
சாமானியர்களின் கதையில் வித்தியாசமான ஸ்டைலில் நடித்து பலரையும் ஈர்த்த குப்பத்து ராஜாவான ரஜினியையும் இப்படத்தையும் காலங்கள் கடந்தும் ரசிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்