HBD Meera Vasudevan: மலையாளம், இந்தி, தமிழில் ஓடிய பந்தய குதிரை மீரா வாசுதேவன் பிறந்தநாள் இன்று!
HBD Meera Vasudevan: நடிகை மீரா வாசுதேவன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை..

மீரா வாசுதேவன், 2000களின் துவக்கத்தில் கோலிவுட்டில் உச்சரிக்கப்பட்ட நடிகையின் பெயர். தாய் மொழியான தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்கள் செய்து நல்ல ஒரு நடிகையாகப் பெயர் எடுத்துள்ளார். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள நம்மிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த மீரா வாசுதேவன்? மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் உள்ள தமிழ்க்குடும்பத்தில் வாசுதேவன் மற்றும் ஹேமலதா ஆகிய தம்பதியருக்கு மூத்த மகளாக 1982ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி பிறந்தவர். இவரது தங்கை அஸ்வினி பாலிவுட்டில் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இருந்தாலும், இவர் தனது கல்லூரிப் படிப்பில் இளங்கலை உளவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் பயின்றார். அதன்பின் மாடலிங் துறையில் நுழைந்த மீரா வாசுதேவன், ஐ.சி.சி செட்மேக்ஸ் விளம்பரத்தில் கிடைத்த புகழ்வெளிச்சம் மூலம் 2003ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தார். பின் மீரா வாசுதேவன், பாலிவுட் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம்செய்துகொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த உறவு ஜூலை 2010-உடன் முடிவுக்கு வந்தது. அதன்பின், மலையாள நடிகர் ஜான் கொக்கேனை மணந்தார். இத்தம்பதிகளுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். இருப்பினும், சில பெர்ஷனல் பிரச்னைகளால் இந்த மணவாழ்க்கையும் 2016ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
திரைவாழ்கை: ஐ.சி.சி. செட் மேக்ஸ் விளம்பரத்தினை பார்த்த இயக்குநர் பார்வதி பாலகோபாலனின் தாயார், மீரா வாசுதேவன் குறித்து தனது மகளிடம் தெரிவிக்க அதன்மூலம் ‘ரூல்ஸ் - பியார் கா சூப்பர்ஹிட் ஃபார்முலா’ இந்தி திரைப்படத்தின் ஆடிசனுக்கு அழைக்கப்பட்டார். பின், அப்படத்தில் மிலிந்த் சோமனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார், மீரா வாசுதேவன். அப்படம் இந்தியில் 2003ஆம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு,சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெங்கட் பிரபு கதையின் நாயகனாக நடித்த ‘உன்னைச் சரணடைந்தேன்’ படத்தில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் நடித்ததன்மூலம் தமிழ்நாடு அரசின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வென்றார்.
