Actress Kalpana Memorial Day: சின்ன வீடு படத்தில் நடித்த கல்பனாவை மறக்கமுடியுமா?
நடிகை கல்பனாவின் நினைவுநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை பற்றிக் காண்போம்.
தமிழ் சினிமாவில் சின்ன வீடு என்ற படம் மூலம் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவிலும் முக்கிய நடிகையாகத் திகழ்ந்தவர், நடிகை கல்பனா. அவரது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் குறித்து அறிந்துகொள்ள நம்மிடம் சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த நடிகை கல்பனா?: நடிகை கல்பனா, நாடக நடிகர்களான சவரா வி.பி.நாயர் மற்றும் விஜயலட்சுமி தம்பதியினருக்கு மூத்தமகளாக 13 அக்டோபர் 1965ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரது சகோதரிகள் தான், கலாரஞ்சனி, ஊர்வசி ஆவர். தவிர, இவருக்கு பிரின்ஸ் நாயர், கமல் ரோய் என்னும் சகோதரர்களும் உண்டு. இவர் மலையாள இயக்குநர் அனில் குமாரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து 2012ஆம் தேதி விவாகரத்து பெற்றார். இத்தம்பதியருக்கு ஸ்ரீமயி என்னும் மகள் உண்டு.
திரை வாழ்க்கை: நடிகை கல்பனா, சிறுவயதில் 'விடருன்ன மொட்டுக்கள்' என்னும் படம் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இருப்பினும், 1980ஆம் ஆண்டு ஜி. அரவிந்தன் இயக்கத்தில் பூக்குவெயில் என்பதுவே, அவர் திரையில் பெரிய அளவில் நடித்த முதல் படம் ஆகும். தமிழ் சினிமாவில் இயக்குநர் பாக்யராஜின் இயக்கத்தில் அவர் நடித்த சின்ன வீடு படத்தில், ஜோடியாக நடித்து தமிழ்நாடெங்கும் பிரபலமானார், நடிகை கல்பனா. அந்த கதாபாத்திரத்தின் பெயர் பாக்யலட்சுமி எனச் சொல்லும் அளவுக்கு அதனை மிகவும் ஜனரஞ்சகமான கேரக்டராக வடிவமைத்து இருந்தார், இயக்குநர் பாக்யராஜ்.
அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா நடித்த சதி லீலாவதி படத்தில், ரமேஷ் அரவிந்தின் மனைவி லீலாவதியாக நடித்தும் அசத்தியிருப்பார், நடிகை கல்பனா. தவிர, திருமதி வெகுமதி, சிந்துமதிப்பூ, லூட்டி, டும் டும் டும், பம்மல் கே. சம்பந்தம், காக்கி சட்டை, தோழா ஆகியப் படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர். சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியான, சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2வில் சின்ன பாப்பாவாக நடித்திருந்த நடிகை கல்பனா, மாமா மாப்ளே என்னும் சீரியலிலும் நடித்திருந்தார். தவிர, எக்கச்சக்க மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தேசியவிருதுக்குக் காரணமான படம்: 60ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தில் ‘தனிச்சல்லே ஞான்’ என்னும் படத்தில் வாழ்வில் துவண்டு இருந்த பெண்ணுக்கு நம்பிக்கையூட்டு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, நடிகை கல்பனாவுக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதேபோல் துல்கர் சல்மானின் ’சார்லி’ படத்தில் மரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக, ஏசியா நெட் விருது பெற்றார்.
மறைவு: இறுதியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் தோழா படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது, ஹைதராபாத்தில் தங்கியிருந்த அறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்,நடிகை கல்பனா. இதையறிந்து அவரை எடுத்துக்கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், படக்குழு. ஆனால், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனவரி 26ஆம் தேதி அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
எந்தவொரு இமேஜையும் பார்க்காமல் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய நடிகை கல்பனாவின் நினைவுநாளில் அவரின் நடிப்பினை நினைவுகூர்வோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9