தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Kajal Aggarwal: முதல் படமே ஃபிளாப்.. வெறித்தனமாக ஆடிய டான்ஸ்.. முன்னுக்கு வந்த நடிகை காஜல் அகர்வாலின் கதை!

HBD Kajal Aggarwal: முதல் படமே ஃபிளாப்.. வெறித்தனமாக ஆடிய டான்ஸ்.. முன்னுக்கு வந்த நடிகை காஜல் அகர்வாலின் கதை!

Marimuthu M HT Tamil
Jun 19, 2024 06:54 AM IST

HBD Kajal Aggarwal: முதல் படமே ஃபிளாப் மற்றும் அதன்பின் படங்களில் வெறித்தனமாக ஆடிய டான்ஸ் மூலம் முன்னுக்கு வந்த நடிகை காஜல் அகர்வாலின் கதை குறித்து அறிந்துகொள்வோம். நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புப் பகிர்வு இக்கட்டுரையாகும்.

HBD Kajal Aggarwal: முதல் படமே ஃபிளாப்.. வெறித்தனமாக ஆடிய டான்ஸ்.. முன்னுக்கு வந்த நடிகை காஜல் அகர்வாலின் கதை!
HBD Kajal Aggarwal: முதல் படமே ஃபிளாப்.. வெறித்தனமாக ஆடிய டான்ஸ்.. முன்னுக்கு வந்த நடிகை காஜல் அகர்வாலின் கதை!

HBD Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாவார். இதுவரை தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகைக்கான ஸைமா விருதினை மூன்று முறை வென்றிருக்கிறார்.

தமிழில் கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தமிழ்நாட்டில் சம்பாதித்து வைத்து இருக்கும் அவர் இன்று தனது 39ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றி நம்மிடம் அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

காஜல் அகர்வாலின் பூர்வீகம் என்ன?:

காஜல் அகர்வால் 1985ஆம் ஆண்டு, ஜூன் 19ஆம் தேதி, வினய் அகர்வால் மற்றும் சுமன் அகர்வால் தம்பதிக்கு மூத்த மகளாக மும்பையில் பிறந்தார். காஜல் அகர்வாலின் குடும்பம், பஞ்சாபின் அமிர்தசரஸை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் காஜல் பிறந்து வளர்ந்தது எல்லாம், மும்பை மாநகரில் தான். காஜல் அகர்வாலின் தந்தை துணி வியாபாரமும், அவரது தாய் மிட்டாய் வியாபாரமும் செய்து வந்தனர். இதனால் சிறுவயது முதலே, தாய் மற்றும் தந்தையின் பிசினஸை காஜல் அகர்வால் நிர்வகித்து வந்தார். காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும், ஒரு நடிகை ஆவார்.

காஜல் அகர்வால், மும்பையின் துறைமுகம் பகுதியில் இருந்த புனித அனிஸ் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், ஜெய் ஹிந்த் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். காஜல் அகர்வால் தனது இளங்கலை பட்டப்படிப்பை மும்பையில் உள்ள கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியில் ஊடகத்துறைப்பிரிவில் படித்தார். நடிப்புத்துறையில் இருந்தாலும், காஜல் அகர்வால், 6, அக்டோபர் 2020ஆம் ஆண்டு, கொரோனா உச்சகட்டத்தில் இருக்கும்போது கவுதம் கிச்சுலு என்பவருடன் தனது திருமணம் நடக்க இருக்கிறது என்பதை திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின், அதே 2020ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30ஆம் தேதி, இந்த ஜோடியினர், மும்பையில் தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக தங்களது திருமணத்தை செய்துகொண்டனர். காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சுலு தம்பதியினருக்கு, 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி, நெயில் என்ற மகன் பிறந்தார். அதன்பின்னும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார், காஜல் அகர்வால்.

ட்ரெண்டிங் செய்திகள்

காஜல் அகர்வாலின் திரைப்பிரவேசம்:

காஜல் அகர்வால், முதலில் ’கோன் ஹோ கயா நா’ என்னும் இந்தி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து, 2004ஆம் ஆண்டு ஒரு நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றார். இருப்பினும் அப்போது அவருக்கு திரைத்துறையில் சரியான வாய்ப்பு வரவில்லை. கிடைக்கவும் இல்லை. விடாமல் முயற்சித்த அவருக்குப் பின், 2007ஆம் ஆண்டு, முதன்முதலாக ‘லட்சுமி கல்யாணம்’ என்னும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரது முதல் தெலுங்கு படமே  அட்டர் ஃபிளாப் ஆனது. 

அதன்பின், ’சந்தமாமா’ என்னும் தெலுங்கு படத்தில், காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்தார். அப்படம் ஹிட்டடிக்க மெல்ல அவருக்கு டோலிவுட்டில், மார்க்கெட் கூடத் தொடங்கியது. அது ஒருபுறம் இருக்க, தமிழில் பேரரசுவின் இயக்கத்தில் ‘பழனி’ என்னும் படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இப்படம் ஆவரேஜான வெற்றியைத் தான் பெற்றது. அதன்பின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் காஜல் நடித்தார். ஆனால், அந்த திரைப்படமும் ஃபெயிலியர் ஆக, தமிழில் சரியான இடம் இன்றி தவித்தார். 

இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், தெலுங்கில் காஜல் நடித்த ‘மகதீரா’ மிகப்பெரிய ஹிட்டடித்து டோலிவுட்டில் முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றவுடன், அவரை மீண்டும் முன்னணி ஹீரோக்களின் தமிழ்ப்படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் அணுகினர். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், இப்படத்தில் அவரது வெறித்தனமான டான்ஸ் என்றுகூட கூறலாம். அப்படி, காஜல் அகர்வால், கார்த்தியுடன் ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஜோடியாக இணைந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, அவருக்கு தமிழ்நாட்டிலும் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியது. 

அதன்பின், சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ ஆகியப் படங்களில் கதாநாயகியாக ஆனதன்மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார், காஜல் அகர்வால். பின், மீண்டும் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ‘அழகு ராஜா’, தனுஷுடன் மாரி, விஷாலுடன் ’பாயும் புலி’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, அஜித் குமாருடன் ‘விவேகம்’ ஆகியப் படங்களில் நடித்தார். 

பின் மூன்றாவது முறையாக 2017ஆம் ஆண்டு, விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் ஜோடி ஆனார். அதன்பின், தெலுங்கில் பிஸியான காஜல் அகர்வால், 2019ஆம் ஆண்டு ‘கோமாளி’ படத்திலும், அதன்பின் ‘ஹே சினாமிகா, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’யில் நடித்து இருக்கிறார். அப்படம் விரைவில் ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது.

இப்படி பல தமிழ்ப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் தமிழில் திகழும் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!