HBD Actor MG Chakrapani: குணச்சித்திர நடிப்பில் முன்னோடி.. எம்.ஜி.ஆருக்கு தாயுமானவர் எம்.ஜி.சக்ரபாணி பிறந்தநாள் இன்று!
நடிகர் எம்.ஜி.சக்ரபாணி பிறந்த தினம் குறித்தான சிறப்புக்கட்டுரை இதோ..
எம். ஜி. சக்ரபாணி என அழைக்கப்படும் மருதூர் கோபாலன் சக்ரபாணி, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் ஆவார். இவர் தமிழ்த்திரைப்படத்துறையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டவர். எம்.ஜி.ஆருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தவர்.
சக்ரபாணியின் குடும்பம் எத்தகையது? விடுதலைக்கு முந்தைய பிரிட்டிஷ் கால கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடவன்னூர் என்னும் ஊரில் ஜனவரி 13ஆம் தேதி, 1911ஆம் ஆண்டு, கோபால மேனன் மற்றும் சத்யபாமா தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்,எம்.ஜி. சக்கரபாணி. இவர் பிறந்ததும் இவரது குடும்பம் அன்றைய ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருந்த இலங்கையின் கண்டிக்குப் புலம்பெயர்ந்தது. அங்கு கோபால மேனன் நீதிபதியாக செயல்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கண்டியில் உடல்நலம்குன்றி அங்கேயே உயிரிழந்தார். அதேபோல், எம். ஜி. சக்ரபாணியின் சகோதரி ஒருவரும் அங்கேயே மரணமடைந்தார். இதனால் எம்.ஜி. சக்ரபாணியின் தாய் சத்யபாமா மனதளவில் மிகவும் துன்பத்தைச் சந்தித்தார். அதன்பின் தனது பிள்ளைகளான எம்.ஜி. சக்ரபாணியையும், எம்.ஜி.ராமச்சந்திரனையும் அழைத்துக்கொண்டு தாய் சத்யபாமா, தனது தூரத்து உறவினரின் ஊரான கும்பகோணம் வந்தடைந்தார்.
அங்கு யானையடி பள்ளியில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.சக்ரபாணி ஏழாம் வகுப்பு வரை அங்கு பயின்றார். பின், வறுமையின் காரணமாக, எம்.ஜி.சக்ரபாணியையும் அவரது சகோதரர் எம்.ஜி.ராமச்சந்திரனையும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்னும் தமிழ்நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டார், தாய் சத்யபாமா.
திரை வாழ்க்கை: எம்.ஜி.ஆர் சினிமாவில் அறிமுகமான அதே 1936ஆம் ஆண்டு 'இரு சகோதரர்கள்' என்னும் படத்தில் காவல் ஆய்வாளர் கேரக்டரில் நடித்திருந்தார், எம்.ஜி. சக்ரபாணி. பின், மாயா மச்சிந்திரா, ஜோதி போன்ற படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்பட்டார். பின்னர், 1944ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா கதாநாயகனாக நடித்த மஹாமாயா என்னும் படத்தில் நீலன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார், நடிகர் எம்.ஜி. சக்ரபாணி.
அதேபோல் ஸ்ரீமுருகன், மருதநாட்டு இளவரசி,மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் துணை கதாபாத்திரத்தில் கலக்கினார், நடிகர் எம்.ஜி.சக்ரபாணி.
பின், மன்னாதி மன்னன் திரைப்படத்தில் கரிகாலச்சோழனாகவும், இதயவீணை திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் தந்தையாகவும் நடித்தார். பின், நம் நாடு படம் மூலம் தயாரிப்பாளராகவும், அரசகட்டளை என்னும் படத்தின் மூலம் இயக்குநராகவும் ஆனார், எம்.ஜி.சக்ரபாணி. எம்ஜிஆர் உடன் 19 படங்களில் எம்.ஜி.சக்ரபாணி நடித்துள்ளார்.
எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். அந்த திரைப்படத்தை எம்ஜிஆரை தயாரிக்க சொல்லி ஆலோசனை கொடுத்தது, எம்.ஜி.சக்கரபாணி தான்.
எம்.ஜி.ஆரின் பாசம்: அண்ணன் பேச்சை தட்டாமல் கேட்பவர்தான் எம்ஜிஆர். எம்ஜிஆரின் வாழ்க்கையில் கிடைத்த வெற்றிகளுக்கு அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
அதனாலேயே எம்.ஜி.சக்ரபாணியை பெரியவர் என்றும்; எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் அவரது நெருங்கிய தோழர்கள் அழைப்பதுண்டு.
இப்படி வறுமையில் இருந்து வளம்பெறும் வரை அண்ணன் - தம்பியாக பாசத்துடன் என்றும் மாறாமல் இருந்த எம்.ஜி.சக்ரபாணி - எம்.ஜி.ஆரின் பந்தம் முடிவில்லாதது. அப்படி , பல நல்ல செயல்களில் பெரியவராக இருந்த எம்.ஜி.ஆரின் வலதுகரம் எம்.ஜி.சக்ரபாணி பிறந்த தினம் இன்று. அவரை வாழ்த்தி நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்