HBD Harish Kalyan: பலான படத்தில் அறிமுகம்.. பிக்பாஸ் தந்த பிரேக்.. பியார் பிரேமா காதல் தந்த மறுவாழ்வு!
HBD Harish Kalyan: பலான படத்தில் அறிமுகம் ஆகி, பிக்பாஸ் தந்த பிரேக் மற்றும் பியார் பிரேமா காதல் திரைப்படம் தந்த மறுவாழ்வு ஆகியவற்றால் நல்ல நடிகராகத் திகழும் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள். அவர் பற்றிய சிறப்புக்கட்டுரையினைப் பார்ப்போம்!

HBD Harish Kalyan: இன்றைய பல இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகராகத் திகழ்கிறார், ஹரிஷ் கல்யாண். சர்ச்சைக்குரிய இயக்குநர் சாமியின் சிந்துசமவெளி திரைப்படத்தில் அமலா பாலின் கணவர் போன்று நடித்து பிரபலமானவர்.
இவர் நடித்த பியார் பிரேமா காதல் முதல் இவருக்கு எக்கச்சக்க பெண்கள் ரசிகைகள் ஆகினர். 34ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ஹரிஷ் கல்யாண் குறித்து அறிய நம்மிடம் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.
யார் இந்த ஹரிஷ் கல்யாண்?:
ஹரிஷ் கல்யாண், ஜூன் 29ஆம் தேதி 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை கல்யாண் ஃபைவ் ஸ்டார் என்னும் மியூஸிக் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பட விநியோகஸ்தர் ஆவார். சிறு வயது முதலே சினிமாவில் நடிப்பதிலும், இசையிலும் ஆர்வம் கொண்டிருந்த ஹரிஷ் கல்யாண், அதற்கான முயற்சியை விடாமல் செய்துகொண்டிருந்தார். பள்ளி படிக்கும் காலங்களிலேயே ஹரிஷ் கல்யாண் இந்துஸ்தானி இசையைக் கற்றும், கீபோர்டு வாசிக்க தெரிந்தும் வைத்து இருந்தார். சினிமாவில் நுழைந்து நடிகர் ஆனதும் நர்மதா உதயகுமார் என்னும் தனது நீண்ட நாள் தோழியை 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், ஹரிஷ் கல்யாண்.
திரைத்துறையில் ஹரிஷ் கல்யாண்:
உயிர், மிருகம் ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமியின் ‘சிந்துசமவெளி’ திரைப்படத்தில் 2010ஆம் ஆண்டு, திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் தனது மனைவியைப் பற்றி தெரியாமல் இருக்கும் அப்பாவி கணவனாக நடித்திருந்தார்.
முதல் படமே பிட்டு பட ரேஞ்சுக்கு ஆனதால், வீட்டில் சரியான சப்போர்ட் இல்லாமல், தன் முயற்சியிலேயே திரைத்துறையில் கால் பதிக்க முயன்றார்.
அதே ஆண்டு, ‘அரிது அரிது’ என்னும் படத்தில் நடித்தார். அப்படம் தோல்வியைத் தழுவியது. அதன்பின், எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டப்படி குற்றம்’ திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின், ‘குட்டி பெக் - ஏ டோஸ்ட் டூ லைஃப்’மற்றும் ‘ ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்’ ஆகிய இரண்டு சுயாதீனப் பாடல்களில் பணிபுரிந்தார்.
அதன்பின் ‘சந்தமாமா’ என்னும் கருணாஸின் திரைப்படத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தார். அப்படமும் தோல்வியைத் தழுவியது.
சரியான பிரேக் இல்லாமல் நடித்து வந்த ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான ’பொறியாளன்’ திரைப்படம் தான், ஹீரோவாக ஒரு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதன்பின், சுசீந்திரனின் தயாரிப்பில் உருவான ‘வில் அம்பு’ திரைப்படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக நடித்து ஸ்கோர் செய்திருந்தார், ஹரிஷ் கல்யாண்.
பிக்பாஸ் தந்த பிரேக்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீஸன் ஒன்றில் பங்கெடுத்த ஹரிஷ் கல்யாண், அந்நிகழ்ச்சிக்குப் பின், இயக்குநர் இளனின் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆக, ஹரிஷ் கல்யாணுக்கு பெண் ரசிகைகள் பலர் கிடைத்தனர். தோற்றத்திலும், நடிப்பிலும் தன் முழுத்திறனை வெளிப்படுத்தியிருப்பார், நடிகர் ஹரிஷ் கல்யாண்.
அதன்பின், 2019ஆம் ஆண்டு, ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படமும் இவரது நடிப்பில் கமர்ஷியலாக சக்சஸ் ஃபுல் படமானது. அடுத்து சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதியின் இயக்கத்தில் ‘தனுசுராசி நேயர்களே’திரைப்படத்தில் ஜோதிடத்தை அதிகம் நம்பும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பின், தாராள பிரபு என்னும் திரைப்படத்தில் விந்து தானம் செய்யும் நபராக நடித்திருப்பார், ஹரிஷ் கல்யாண். பின் பிரபல ஓடிடி நிறுவனத்திற்குத் தயாரான சிம்புதேவன் இயக்கிய ‘கசட தபற’ என்னும் ஆறு கதைகளைக் கொண்ட படத்தில் நடித்திருந்தார். பின் இப்படம் சோனி லைவ்வில் வெளியானது.
அதன்பின், தெலுங்கில் ஹிட்டடித்த ‘பெல்லு சூப்புலு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஓ மனப்பெண்ணே’ திரைப்படத்திலும், எம்.எஸ். தோனி முதல்முறையாக தயாரித்த ‘லெட்ஸ் கெட் மேரீட்’ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பார்க்கிங்’ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது நூறுகோடி வானவில், டீசல், லப்பர் பந்து ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார்.
வருங்கால தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக வளர்ந்துவரும் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

டாபிக்ஸ்