51 Years of Bharatha Vilas:தேச உணர்வு.. அப்பார்ட்மென்ட் நட்புக்கு விதைபோட்ட 'பாரதவிலாஸ்'
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  51 Years Of Bharatha Vilas:தேச உணர்வு.. அப்பார்ட்மென்ட் நட்புக்கு விதைபோட்ட 'பாரதவிலாஸ்'

51 Years of Bharatha Vilas:தேச உணர்வு.. அப்பார்ட்மென்ட் நட்புக்கு விதைபோட்ட 'பாரதவிலாஸ்'

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 08:15 AM IST

51 years of BharathaVilas: பாரதவிலாஸ் திரைப்படம் வெளியாகி 51 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

பாரத விலாஸ்
பாரத விலாஸ்

பாரதவிலாஸ் திரைப்படத்தின் கதை என்ன?: கதையின் நாயகனான கோபாலும் கெளரியும், ஒரு ஆங்கிலேயருக்குச் சொந்தமான இல்லத்தில் வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்து, போட்டி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

பின், இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். அதன்பின், கோபால் தொழில் செய்ய விரும்பியபோது இருவரும் ஒரே நாளில் தங்களது பணிகளை விட்டுவிடுகின்றனர்.

பக்கத்து வீட்டில் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நரசிம்ம நாயுடுவும் அவரது மனைவியுமான மீரா பாயும் வசிக்கின்றனர். ஆனால், மீரா பாய் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.

ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன.கெளரி மற்றும் கோபால் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்னொரு குழந்தை பிறக்கவுள்ளது.

அப்போது பல்தேவ் சிங் என்பருடைய பஞ்சாபி குடும்பமும், இப்ராஹிம் என்பவருடைய மலையாளி குடும்பமும் ஒரு காம்பவுண்ட்க்குள், வாடகைக்கு வருகின்றனர். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி குடும்பங்களுக்கு இடையே வரும் முட்டல் மோதல் வருகிறது. பின், இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக்கொள்கின்றனர்.

இதற்கிடையே கோபாலின் நிறுவனத்தில் அவரது செயலாளராகப் பணியில் சேரும் கலைவாணி, அவரை திருமணத்தைத் தாண்டிய உறவில் இழுத்து, அவரது சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கிறார். இதற்கு கலைவாணியின் அண்ணன் தான், திட்டம்போட்டு கொடுக்கிறார். ஒருநாள் இருவரும் அருகருகே இருக்கும்போது புகைப்படம் எடுத்துவிடுகிறார். அதனை வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டி, பிளாக்மெயில் செய்து கோபாலிடம் பணம்பறிக்க முயற்சிக்கிறார்.

அப்போது பக்கத்துவீட்டினை சார்ந்தவர்கள், பிளாக் மெயில் செய்யும் நபரை எதிர்த்துப்போட உதவுகின்றனர்.

படத்தில் திடீர் டிவிஸ்ட்டாக நான்கு குடும்ப போர்ஷன்களையும் வாடகைக்கு விட்டிருந்த, ஆங்கிலேயர், அந்த வீட்டினை விற்றுவிட்டு, தனது சொந்த நாடான இங்கிலாந்து செல்ல விரும்புகின்றார். அப்போது, நான்கு குடும்பத்து மனிதர்களும் ஒன்று சேர்ந்து அந்த வீட்டை வாங்க முயற்சிக்கின்றனர். நரசிம்ம நாயுடுவிடம் பணம் இல்லை. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரான கோபால், அவரது பங்கிற்கும் பணம்கொடுத்து வாங்கி, அதைப் பின்னாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தரச்சொல்லி நாயுடுவின் குடும்பத்தைத் தங்கவிடுகிறார். இந்தியாவின் வெவ்வேறு ஒரே வீட்டில் வசிப்பதால், அதற்கு ‘பாரத விலாஸ்’ என அழைக்கப்படுகிறது.

அதன்பின், காலங்கள் உருண்டு ஓடுகிறது. கோபால் கொஞ்சம் தொழில் செய்து பணம் சேர்ந்த திமிருடன் இருக்கிறார். கோபால் மற்றும் கெளரியின் இளையமகள், இப்ராஹிமின் குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகுகிறார். அப்போது ஒரு மொட்டைக் கடுதாசி வருகிறது. அதில், கோபாலின் மகள், இப்ராஹீமின் மகன் ஹமீதைக் காதலிப்பதாக அதில் இருக்கிறது. இதனால் கோபமுற்ற கோபால், இப்ராஹீமின் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் நிறுத்துகிறார்.

மேலும் குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் இப்ராஹீம், தனது மகனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன்பின், வெளியே செல்லும் ஹமீது, ராணுவத்தில் சேர்ந்து போர் முனையில் வீரமரணம் அடைகின்றான். போர்முனைக்குச் செல்வதற்கு முன், ஹமீது எழுதிய கடிதத்தில், கோபாலின் மகளும், ஹமீதும் அண்ணன் - தங்கையாகப் பழகியிருப்பது அந்த கடிதம் மூலம் அம்பலமாகிறது. அதில் இப்ராஹீமும் கோபாலும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி சமாதானம் ஆகிக்கொள்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கோபாலின் மகனும், பல்தேவ் சிங்கின் மகளும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் காதலிக்கின்றனர்.

அப்போது கோபாலின் மகளுக்குத் திருமணம் திட்டமிடப்படப்படுகிறது. அப்போது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நொடிந்துபோகிறார், கோபால். அதையெல்லாம் கண்டுகொள்ளாத, மணமகன் வீட்டார், மணமகளின் தந்தையான கோபாலிடம் வரதட்சணை கேட்கின்றனர். இதனால் மனமுடைந்துபோன, கோபால், நரசிம்ம நாயுடுவிடம், தங்களது மகனை தனது மகளுக்குத் திருமணம் செய்துவைக்குமாறு பணிக்கிறார். ஆனால், நரசிம்ம நாயுடு ஒரு கண்டிஷன் போடுகிறார். கோபாலின் மகனை, பல்தேவ் சிங்கின் மகளுக்குத் திருமணம் செய்யுங்கள் என்பதே அந்த நிபந்தனை. இதில் யாருக்கும் தெரியாமல் காதலிக்கும் பல்தேவ் சிங்கின் மகளும், கோபாலின் மகனும் மகிழ்ச்சி அடைகின்றனர். இறுதியில் அனைத்து குடும்பங்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கிறது.

படத்தில் கோபாலாக சிவாஜி கணேசனும், கெளரியாக கே.ஆர்.விஜயாவும், பல்தேவ் சிங்காக மேஜர் சுந்தர்ராஜனும், குலாபியாக தேவிகாவும் நடித்து இருந்தனர். மேலும், இப்ராஹீம் பாயாக வி.கே.ராமசாமியும், சமீராக ராஜசுலோச்சனாவும் நரசிம்ம நாயுடுவாக எம்.ஆர்.ஆர். வாசுவும், மீரா பாயாக மனோரமாவும் நடித்திருந்தனர். தவிர, தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், இந்தி நடிகர் சஞ்சீவ் குமார், மலையாள நடிகர் மது, கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்புத்தோற்றங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்ற இந்திய நாடு நம் நாடு, இந்தியர் என்பது நம் பேரு என்னும் பாடல் கூறுவது போல், தேச ஒற்றுமையை இப்படம் வலியுறுத்துகிறது. இன்று டி.வி.யில் போட்டாலும் 2கே கிட்ஸ்களும் ரசிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பது, இப்படத்தின் கூடுதல் சிறப்பு ஆகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.