Aishwarya Rajesh: டான்ஸ் தந்த திருப்பம்.. பக்கத்து வீட்டு பெண் லுக்.. ரசிகர்கள் மனதில் குடிபுகுந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh Birthday: சினிமா பின்புலத்தை சேர்ந்த குடும்பமாக இருந்தாலும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் திறமையை வெளிப்படுத்தி நடிகையாக ஆனவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தென்னிந்திய சினிமாக்களில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார்.

தமிழ் டிவி காமெடி ஷோவான சன்டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் ஹீரோயினாகி தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா பின்னணி குடும்பத்தை சேர்ந்தவராக உள்ளார்.
டான்ஸ் ஏற்படுத்திய திருப்பம்
ஐஸ்வர்யா ராஜேஷ் தாத்தாவான அமர்நாத் தெலுங்கு சினிமாவில் 1950-60 காலகட்டத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் பின்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையான ராஜேஷ் தெலுங்கில் நீலிவங்கா என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சில படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்த இவர் மதுபழக்கத்தால் 38 வயதில் உயிரிழந்தார்.
அப்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எட்டு வயதுதான். அப்போது அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், டான்ஸ் மீதான ஆர்வத்தால் முறையாக பயின்றார். இதன் மூலம் பல்வேறு டான்ஸ் ஷோக்களில் பங்கேற்ற இவருக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறந்த பெர்பார்மென்ஸ்களால் அனைவரையும் கவர்ந்து மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார்.