Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 16 ஆயிரம் பாடல்கள்.. மெலடி, எக்ஸ்பிரஷன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு
Singer Jayachandran Died: பழம்பெரும் பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. மெலடி, எக்ஸ்பிரஷன் பாடகரான ஜெயச்சந்திரன் தென்னிந்திய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த மெலடி பாடகராகவும், எக்ஸ்பிரஷன் சிங்கர் என்றும் அழைக்கப்பட்டவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த 1965களில் இருந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பின்னணி பாடகராக இருந்து வந்துள்ளார். இதுவரை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட தென்னிந்திய மொழிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திருச்சூர் அமலா மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) அவரது உயிர் பிரிந்தது. ஏற்கனவே அவர் புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இன்று மாலை 7 மணியளவில் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 7:54 மணிக்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.