59 Years of Kaakum Karangal: சிவக்குமாரின் முதல் படம், முதல் வசனம்..! குடும்ப கதை, பாக்ஸ் ஆபிஸில் தோல்வி
ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத போதிலும் சிவக்குமார் முதல் படம் என்ற பெயரில் பின்னாளில் இந்த படம் முக்கியத்துவம் பெற்றது. குடும்ப கதையாக இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை குவிக்காமல் தோல்வியை தழுவியது.

தமிழ் சினிமாவில் 1960களில் சிறந்த கமர்ஷியல் இயக்குநராக வலம் வந்த ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் உருவாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிதாக கல்லாகட்டாத படம் காக்கும் கரங்கள். அதாவது ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் பெரிய வரவேற்பை பெறாத படங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் இது முக்கியத்துவமான படமாக உள்ளது. இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் எஸ்.எஸ். ராஜேந்திரன், சி.ஆர். விஜயகுமாரி என்றாலும், இரண்டாவது ஹீரோவாக நடித்த சிவக்குமாரின் அறிமுக படம் இதுதான்.
சிவக்குமார் பேசிய முதல் வசனம்
"ராதா,உன் முகத்த நீ கண்ணாடில பார்த்தது இல்லையா? நீ அழகானவன்னு உங்க அண்ணனும் அம்மாவும் உன்கிட்ட சொன்னது இல்லையா?.. இதுதான் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட முதல் வசனம். இந்த வசனத்தை பேசி தான் திரைத்துறையில் தனக்கான பயணத்தை தொடங்கியுள்ளார்.
பழனிசாமி என்ற நிஜப்பெயர் கொண்டு, இந்த படத்தில் சினிமாவுக்காக அவர் சிவக்குமார் என பெயர் மாறினார். இந்த படத்துக்கு முன்னர் சித்ரா பெளர்ணமி என்ற படத்தில் கமிட்டானார் சிவக்குமார்.
ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. சிவக்குமாரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக சித்ரா பெளர்ணமி படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சு ஏவிஎம் நிறுவனத்துக்கு சிபாரிசு செய்து காக்கும் கரங்கள் வாய்ப்பை பெற்று தந்தார்கள். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட சிவக்குமார் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாக மாறியது உலகறிந்த விஷயம்.
பொருத்தமில்லாத நடிகர்கள் தேர்வு
மெலோ டிராமா பாணியில் அமைந்திருக்கும் காக்கும் கரங்கள் படத்தின் கதை, பிரிட்டீஷ் நாவலான தி பெயிண்டட் வெயில் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. காதல், குடும்ப வாழ்க்கை, உறவு சிக்கலை மையப்படுத்தியிருக்கும் இந்த படத்தில் நாகேஷ், எல். விஜயலட்சுமி, எஸ். என். லட்சுமி, எஸ்.வி சுப்பையா உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
இருப்பினும் படத்தின் பிரதான கதாபாத்திரமான எஸ்.எஸ். ராஜேந்திரன், சி.ஆர். விஜய் குமாரி ஏற்று நடித்த கதாபாத்திரம் அவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸில் சொதப்பல்
இந்த படத்துக்கு முன்னர் இவர்கள் இருவரும் நடித்த நானும் ஒரு பெண் ஹிட்டானதால், மீண்டும் இந்த ஜோடியை நடிக்க வைத்த ஏவிஎம் நிறுவனம் மும்முரமாக இருந்துள்ளது. ஆனால் கதை இவர்களுக்கு பொருத்தமாக இல்லாமல் போக பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
படத்துக்கு வாலி, கண்ணதாசன் பாடல்கள் எழுத கே.வி. மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் வரவேற்பை பெற்றன. இந்த படம் தான் ஏவிஎம் நிறுவனத்துக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்த முதல் படமாக இருந்தது.
ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத போதிலும் சிவக்குமாரின் அறிமுக படம் என்ற பெயரில் பின்னாளில் இந்த படம் முக்கியத்துவம் பெற்றது. குடும்ப வாழ்க்கையில் நிகழும் இன்ப, துன்பங்களை பற்றிய கதையாக இருக்கும் காக்கும் கரங்கள் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்