பிரின்ஸ் ஃப்ளாப் ஆனதும் இவன் காலின்னு; பார்ட்டியில் அஜித் கொடுத்த மோட்டிவேசன்; அமரன் மேடையில் அசரவைத்த சிவகார்த்திகேயன்
அமரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரின்ஸ் தோல்வியின் போது அஜித்குமார் கூறிய கமெண்ட் குறித்து சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

அமரன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. அந்தப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தன. அப்போது சிவகார்த்திகேயன் அவ்வளவுதான்.. இனி காலி என்றெல்லாம் பேசினார்கள். அந்த சமயத்தில்தான் தீபாவளி கெட் டு கெதருக்காக என்னுடைய நண்பர் அழைத்தார் என்று நான் சென்று இருந்தேன்.
கதவை திறந்தால் அஜித் சார்
கதவை திறந்து உள்ளே நுழைந்து பார்த்தால், அங்கு தல அஜித் சார் இருந்தார். அவர் என்னை பார்த்து கை கொடுத்து ‘welcome to the big league’ ( பெரிய பயணத்திற்கு வரவேற்கிறேன்) என்று கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அப்படியே சாரை பார்த்துக்கொண்டு இருந்தேன். உடனே அவர், உங்களை வளர்ச்சியைப் பார்த்து நிறைய பேர் பாதுகாப்பற்றது போல உணர்கிறார்கள் என்றால், நீங்கள் பெரிய பயணத்திற்குள் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். வெல்கம் என்றார்.
அவர் எனக்கு சீனியராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது, நீங்கள் அப்படி செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்து விட்டு, சென்று இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் பேசியதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு விமர்சனம் நம் மீது வைக்கப்பட்டால், முதலில் அதற்குள் இருக்கும் அர்த்ததை பார்க்க வேண்டும் என்பதுதான். படம் சரியாக இல்லை என்று விமர்சனம் செய்தால், படத்தை சரியாக கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். ஆனால், நம்மையே காலி.. என்று விமர்சனம் வருகிறது என்றால், அதை நம்ப கூடாது. அதை நான் அன்றைக்குதான் புரிந்து கொண்டேன்.” என்று பேசினார்.
அமரன் திரைப்படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
மலேசியாவில் நடந்த ‘அமரன்’ புரோமோஷன் நிகழ்வில், இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராஜ்குமார் பெரியசாமி பேசி இருக்கிறார்.
ஏன் சிவகார்த்திகேயன்?
அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?:
இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாக தெரியவருகிறது. மேலும், பழைய கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதி பெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்