வாய்ப்பை தவறவிட்டாரா சூர்யா? .. SK 25 புறநானூறு படத்தின் கதையா? - அது எப்படியான கதை தெரியுமா?
இந்தப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த திரைப்படம் முன்னதாக கைவிடப்பட்ட புறநானூறு திரைப்படம் என்று சொல்லப்படுகிறது
சூரரைப்போற்று திரைப்படத்தை கொடுத்து, சரிந்து கிடந்த சூர்யாவின் மார்க்கெட்டை மறுபடியும் தூக்கி நிறுத்தியவர் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப்படத்தை தொடர்ந்து, இவர்கள் இருவரும் புறநானூறு படத்தில் இணைந்தனர். ஆனால், அந்தப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அந்தப்படம் தொடர்பாக வெளியான அறிக்கையில், படம் தள்ளிப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - சுதா இணையும் படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.
புறநானூறு படமா?
இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் ஜெயம்ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவாவின் 25 வது படமான இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த திரைப்படம் முன்னதாக கைவிடப்பட்ட புறநானூறு திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.
இந்த நிலையில், இந்தப்படம் புறநானூறு திரைப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் படத்தின் கதை குறித்து சுதா கொங்கரா சினி உலகம் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
புறநானூறு படம் நடக்குமா?
இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், புறநானூறு படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால், அந்த படம் நடக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அந்த படம் நடக்கும். உண்மையில் எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வது என்னவென்றால், அந்த படத்தை நீ எப்போது வேண்டுமென்றாலும் எடு, ஆனால் எடு என்பதுதான்.
நெருக்கமான படம்.
மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். காரணம் என்னவென்றால், அந்த படம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். அந்தப்படத்தின் கருவானது எனக்கு எப்படியானது என்றால், நான் இயக்கிய இறுதிச்சுற்று படத்தை விட 100 மடங்கும், சூரரைப் போற்று திரைப்படத்தை விட 50 மடங்கும் நான் ஆசைப்படுகிற, என்னை சொல்லத்தூண்டுகிற கருவாகும். அந்த அளவுக்கு அந்த படம் எனது மனதிற்கு மிக மிக நெருக்கமானது.
அந்தக்கதையில் நான் சொல்ல நினைப்பதுதான் என்னுடைய அரசியல். அதுதான் என்னுடைய கருத்தியல். அது ஒடுக்கு முறைக்கு எதிரான திரைப்படம். அதனால் தான் அந்த திரைப்படம் என்னுடைய மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருக்கிறது. அதைத்தான் நான் என்னுடைய திரைப்படங்களில் பேச நினைக்கிறேன். ஒடுக்கு முறைக்கு எதிரான பல்வேறு விஷயங்கள், நம்ம சுற்றி நடக்கின்றது. ஆகையால் அதைப் பற்றி நாம் பேசி தான் ஆக வேண்டும். நான் பேசுவேன்.
நான் பேச நினைக்கும் அரசியல்
நான் அடிப்படையிலேயே வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை சொன்னார். அதாவது, சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் இருக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும்.
அந்த நேரத்தில் பெண்கள் யாரும் படிக்க மாட்டார்கள். அவர் படிக்கச் செல்லும் போது, தெருவில் பலர் அவரை அவமானபடுத்துவார்கள். இதனையடுத்து, அவர் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லி, வீட்டிற்கு வந்து விடுவார்.
இதை கவனித்த சாவார்க்கர், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, மறுபடியும் அவரது கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இது சரியா தவறா…? என்ற கேள்வியை கேட்டேன்.
என்னுடைய தாத்தா, சகுந்தலாவின் கதையை சொல்லும் பொழுதும், எனக்கு பல கேள்விகள் எழுந்தன. அவர் ராமர் சீதையோடு வனவாசம் சென்றதை, மிகவும் பக்தி மயமாக சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடம் நான் பல கேள்விகளை எழுப்புவேன்.
ஆண், பெண் விவகாரத்தில் ஏன் அங்கு வித்தியாசம் என்ற ஒன்று வருகிறது. நான் உடல் ரீதியான வித்தியாசத்தை சொல்லவே இல்லை. எனக்கு அது தேவையே கிடையாது. ஒரு ஆண் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு வலிமை இல்லை என்பது ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால், நான் ஒரு பெண் என்பதாலாயே நான் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் கேள்விக்கு உட்பட்டது.
இந்த மாதிரியான கேள்விகளை என்னுடைய படங்களில் எந்த அளவுக்கு எழுப்ப முடியுமோ, அந்த அளவுக்கு நான் எழுப்புவேன்" என்று பேசினார்.
சாவர்க்கர் பற்றி பேசியதற்கு சுதா கொங்கரா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்