54 Years of Vietnam Veedu: காதல், உறவு, ஏமாற்றம்..! படமாக இல்லாமல் பாடமாக இருந்த சிவாஜி கணேசனின் வியட்நாம் வீடு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  54 Years Of Vietnam Veedu: காதல், உறவு, ஏமாற்றம்..! படமாக இல்லாமல் பாடமாக இருந்த சிவாஜி கணேசனின் வியட்நாம் வீடு

54 Years of Vietnam Veedu: காதல், உறவு, ஏமாற்றம்..! படமாக இல்லாமல் பாடமாக இருந்த சிவாஜி கணேசனின் வியட்நாம் வீடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 11, 2024 07:43 AM IST

சுமார் 125 முறைக்கு மேல் மேடையேறிய வியட்நாம் வீடு நாடகம், அதே பெயரில் திரைப்படமாக வெளியாகி காவியமாக மாறியுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு படமாக இல்லாமல் பாடமாகவே இருந்து வருகிறது.

வியட்நாம் வீடு படத்தில் சிவாஜி கணேசன் - பத்மினி
வியட்நாம் வீடு படத்தில் சிவாஜி கணேசன் - பத்மினி

அந்த வகையில் சிவாஜி கணேசனின் பெஸ்ட் பெர்பார்மன்ஸை ரசிகக்கூடிய படங்களில் ஒன்றாக வியட்நாம் வீடு படத்தை சொல்லலாம்.

மேடை நாடகமாக பல மேடைகளில் நிகழ்த்தப்பட்டு, பின்னர் திரைப்படமாக அதை தனது நடிப்பால் மெருகேற்றி உயரூட்டியிருப்பார் சிவாஜி கணேசன். அவருடன் இணைந்து தானும் சளைத்தவர் இல்லை என்பதை தனது அற்புத நடிப்பின் மூலம் வெளிக்காட்டியிருப்பார் பத்மினி.

சிவாஜி கணேசன் - பத்மினி ஜோடியின் சிறந்த குடும்ப சித்திரமான வியட்நாம் வீடு படத்தை பி. மாதவன் இயக்கியிருப்பார். சுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பார். இந்த படத்துக்கு பின்னர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமாகவே மாறினார்.

மேடை ஏறிய வியட்நாம் வீடு கதை

இந்த கதையை எழுதிய பின்பு மேடை நாடகமாக அரங்கேற்ற அப்போதையை பிரபலமான நாடக ட்ரூப்பான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக கம்பெனியை நாடினார். ஆனால் இந்த கதையை நாடமாக அரங்கேற்ற ஒய்.ஜி. பார்த்தசாரதி விரும்பாத நிலையில், இந்த கதை பற்றி கேள்விப்பட்ட சிவாஜி கணேசன் தனது நாடக மன்றம் மூலம் அரங்கேற்றியுள்ளார். ஆரம்பத்தில் சிவாஜி கணேசன், டி.சகுந்தலா நடிக்க 125 இடங்களில் நாடகமாக நடத்தப்பட்டது.

இந்த நாடகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து தனது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து படமாக உருவாக்கினார்.

பிரஸ்டீஜ் பத்மநாபனாக வாழ்ந்த சிவாஜி

படத்தில் சிவாஜி கணேசன் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவராக தோன்றியிருப்பார். நேர்மையும், துணிச்சலும், கெளரவமும், மரியாதையும் மிக்கவராக வாழும் அவரது வாழ்க்கை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சந்திக்கும் அவமானங்களும், உறவுகளால் வரும் ஏமாற்றங்களுமே படத்தின் ஒன்லைன்.

பிராமணக் கதாபாத்திரத்தில் முதன்முதலாக சிவாஜி நடித்த முழுப்படமாக இருக்கும் இதில் மிடுக்கான தோற்றத்தில் ஆரம்பகாட்சிகளில் தோன்றி, இறுதியில் பல ஏமாற்றங்களை சந்தித்தபோதிலும் கம்பீரம் குறையாமல் இருக்கும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

சிவாஜியின் மனைவியாக வரும் பத்மினி, பல்வேறு சிரமங்களுக்கு பிறகும் கடைசி வரையிலும் கணவருக்காக ஆதரவாக இருக்கும் மனைவியாக வாழ்ந்து காட்டியிருப்பார்

நாகேஷ், கே.ஏ. தங்கவேலு, ஸ்ரீகாந்த், வி.எஸ். ராவன் உள்பட பலரும் படத்தில் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருப்பார்கள்.

பாடல்கள் ஹிட்

கண்ணாதாசன் பாடல் வரிகளுக்கு கே.வி. மகாதேவன் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

பாலக்காட்டு பக்கத்திலே வெகுலித்தனத்துடன், சிணுக்கல், காதல் என கொஞ்சும் சிவாஜி - பத்மினி ஜோடி, கடைசிகட்டத்தில் வரும் உன் கண்ணீல் நீர் வழிந்தால் பாடலில் வயது முதிர்ந்த தம்பதிகளின் பரஸ்பர அன்பை வெளிக்காட்டும் விதமாக காட்சிபடுத்தியிருப்பார்கள். இந்த இரண்டு பாடல்கள் கிளாசிக் பாடல்களாக இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

தமிழ் சினிமாவில் அப்போது அதிகமாக வெளிவந்த மெலோ டிராமா பாணி சினிமாவாக இருந்த வியட்நாம் வீடு, சிவாஜி கணேசன் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. 100 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி நல்ல வசூலையும் குவித்தது. படத்தின் க்ளைமாக்ஸில் சிவாஜி இறந்து போவது போல் காட்சி இருக்கும். அந்த ப்ரேமை ப்ரீஸ் செய்து “இதை பார்க்கிறவங்களுக்கு பத்நாபனின் குடும்பம் ஒரு படிப்பினையா இருக்கனும்” என்ற எழுத்து தோன்றும். அந்த வகையில் இந்த படமாக ரசிகர்களுக்கு ஒரு பாடமாகவே இருந்தது. 

தமிழ் சினிமாவின் சிறந்த கிளாஸிக் படங்களில் லிஸ்டில் தவறாமல் இடம்பெறும் படமாக இருந்து வரும் வியட்நாம் வீடு வெளியாகி இன்றுடன் 54 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.