பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்!

Malavica Natarajan HT Tamil
Published Apr 26, 2025 09:56 AM IST

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாடகி ஸ்ரேயா கோஷல் தனது சூரத் இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்! (REUTERS)

ஸ்ரேயா கோஷல் சூரத் நிகழ்ச்சி ரத்து

ஸ்ரேயா கோஷலின் ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி ஏப்ரல் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சூரத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சமீபத்திய துயர சம்பவங்களை முன்னிட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர் இணைந்து இந்த சனிக்கிழமை, ஏப்ரல் 26ஆம் தேதி சூரத் நகரில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

அமைதியும் ஒற்றுமையும்

டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் முழு பணமும் திரும்ப வழங்கப்படும். பணம் செலுத்திய அதே முறையில் தானாகவே திருப்பி செலுத்தப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி." என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், "ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவிருந்த ஸ்ரேயா கோஷலின் சூரத் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அமைதியாகவும், ஒற்றுமையுடனும் நிற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பஹல்காம் தாக்குதல் குறித்து ஸ்ரேயா கோஷல்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில், "என்னால் பஹல்காமைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த குழப்பத்திற்குப் பிறகு நிலவிய அமைதியைப் பற்றி. தங்கள் உலகம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை என்ற நிலையில் இருக்கும் குடும்பங்களைப் பற்றி. அழகான, அமைதியான இடத்தில் உயிர்கள் பறிபோனது என் மனதை உடைக்கிறது.

வன்முறையுடன் எந்த தொடர்பும் இல்லாத உயிர்கள், அதன் பலியாகிவிட்டன. இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இதயம் செல்கிறது. உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

அர்ஜித் சிங் நிகழ்ச்சி ரத்து

முன்னதாக, பாடகர் அர்ஜித் சிங் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஏப்ரல் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த தனது இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார். அர்ஜித் சிங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், "சமீபத்திய துயர சம்பவங்களை முன்னிட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர் இணைந்து இந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்." என்று கூறப்பட்டிருந்தது.

பஹல்காம் தாக்குதல்

மேலும் டிக்கெட் வாங்கியவர்களுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், பணம் செலுத்திய அதே முறையில் தானாகவே திருப்பி செலுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் உள்ள பைசாரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 இந்திய குடிமக்களும், ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.