தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Singer Chinmayi Interview About Rental House Problems Sexual Harassment Family Life

Chinmayi Interview: ‘அவங்களால அவ்வளவு டார்ச்சர்…எங்க கற்ப எங்களுக்கு பாத்துக்க தெரியும்.. நீங்க ஒரு மண்ணும்..’ - சின்மயி

Kalyani Pandiyan S HT Tamil
Mar 19, 2024 06:08 AM IST

சில வீட்டு உரிமையாளர்கள் எங்களிடம் நடந்து கொண்ட நடவடிக்கைகள் நாம் ஏன் பாம்பேவில் இருந்து இங்கே வந்தோம் எதற்காக உயிர் வாழ்கிறோம் என்று நினைக்க வைத்திருக்கிறது. நம்முடைய எல்லா பிரச்சினைகளிலும் அவர்கள் தேவையில்லாமல் மூக்கையும் நுழைப்பார்கள்.

சின்மயி பேட்டி!
சின்மயி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “90களில் நாங்கள் மும்பையில் இருந்து சென்னை வந்தோம். பல்வேறு வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தோம். அதில் ஒரு வீட்டு உரிமையாளர், நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் சாவியை அவரும் வைத்துக் கொள்வார் என்றும் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்வார் என்றும் சொன்னார். 

இன்னும் சிலர் எங்களது குடும்பத்தின் பின்னணி குறித்து துருவித் துருவி விசாரிப்பார்கள். மற்றொருவரோ அவரது மகனை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். அதையெல்லாம் அப்போது கேட்பதற்கு என்னிடம் தைரியம் இல்லை. 

சென்னையில் 32 வருடங்களாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அதில் 42 வீடுகள் மாறி இருப்போம். அவ்வளவு மோசமான அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்து இருக்கின்றன. இப்போது நான் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் தெய்வம் என்று சொல்வேன். காரணம் மீடூ இயக்கம் வழியாக நடந்த சர்ச்சைகளால் பல முறை எங்கள் வீட்டின் முன்னர் பலர் நின்று இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் பார்த்த அவர் என்ன நடந்தாலும் பரவாயில்லை; நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று சொல்லி நின்றார். 

சில வீட்டு உரிமையாளர்கள் எங்களிடம் நடந்து கொண்ட நடவடிக்கைகள் நாம் ஏன் மும்பையில் இருந்து இங்கே வந்தோம். எதற்காக உயிர் வாழ்கிறோம் என்று நினைக்க வைத்திருக்கிறது. 

நம்முடைய எல்லா பிரச்சினைகளிலும் அவர்கள் தேவையில்லாமல் மூக்கையும் நுழைப்பார்கள். என்னவோ எங்களுடைய கற்பை இவர்கள்தான் காப்பாற்றுவது போல… எங்களுடைய கற்பை எங்களுக்கு காப்பாற்றிக் கொள்ள தெரியும்; நீங்களெல்லாம் வந்து எங்களுடைய கற்பை காப்பாற்ற வேண்டாம். 

இதை தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் சில பெரியோர்கள், இதனால் தான் வீட்டில் புருஷன் துணை வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்கள். அப்படியெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. உங்களது கணவர் தவறான எண்ணங்கள் கொண்டவராக இருந்தால், தயவு செய்து அவரை விட்டு விலகி விடுங்கள். 

பெண்கள் அவர்களது பொருளாதார சுதந்திரத்தை எப்போதுமே அவர்களது கையில் வைத்திருக்க வேண்டும். பெண்கள் தங்களது பொருளாதார சுதந்திரத்தை என்றைக்குமே விட்டுக் கொடுக்கவே கூடாது. அவர்களுக்கு என்று ஒரு வேலை எப்போதுமே இருக்க வேண்டும். அந்த வேலையின் மூலமாக வரும் பணத்தை அவர்கள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், எதில் வேண்டுமென்றாலும் செலவழிக்கலாம். அது அவர்களது உரிமை. திருமணம் ஆனவர் என்றால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தப் பணத்தில் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம். 

என்னுடைய கணவர் வீட்டில் இருக்கிறார்;அதனால் நான் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்றெல்லாம் இருக்கக் கூடாது. பெண்கள் அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு வாழக்கூடாது. இப்போது எனக்கு அதை சொல்வதற்கு தைரியம் இருக்கிறது. ஆனால் அப்போது இல்லை. இன்று எங்களுக்கு என்று ஒரு குடும்பம், அழகான கணவர் வந்த பின்னர் அவர்கள் நடந்து கொண்டது எவ்வளவு தவறானது என்பது தெரிகிறது” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்