பறந்த உத்தரவு, பணிந்த சிங்கமுத்து.. வடிவேலு பற்றி பேசமாட்டேன்.. அவதூறும் பரப்ப மாட்டேன்! நீதிமன்றத்தில் உத்தரவாதம்
வடிவேலு பற்றி பேசமாட்டேன், அவதூறும் பரப்ப மாட்டேன் என நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த நடிகர் சிங்கமுத்து மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி காம்போவாக வடிவேலு - சிங்கமுத்து இருந்த வருகிறார்கள். இதையடுத்து நிலம் தொடர்பாக ஏற்பட்ட சரச்சையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து அவதூறு கருத்துகளை பேசி வந்தார்.
வடிவேலு தரப்பில் வழக்கு
இதைத்தொடர்ந்து நடிகர் சிங்கமுத்து, யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
சிங்கமுத்து தரப்பில் உத்தரவாதம்
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அவதூறு கருத்துகளைப் பரப்பவில்லை
நடிகர் வடிவேலுவின் மனு மீதான வழக்கில் சிங்கமுத்து சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், அவதூறாகப் பேசியது எது என நடிகர் வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும், திரைத்துறை சார்ந்தவர்களின் கருத்துகளை மட்டுமே பேட்டியில் குறிப்பிட்டதாகவும், நடிகர் சிங்கமுத்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு தரப்பில், நடிகர் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகள் அளித்து வருவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் வழக்கு தாக்கல் செய்தபின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை எனவும்; மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசிவாய்ப்பு வழங்கி வழக்கை ஒத்திவைக்கவேண்டும் எனவும் நடிகர் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், வடிவேலுவுக்கு எதிராக கொடுத்த அவதூறு கருத்துக்களைத் திரும்ப பெற்றுக்கொள்ளும்படியும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் சொல்லமாட்டேன் என உத்தரவு அளிக்கும்படியும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்யக்கோரி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் வடிவேலு பற்றிய அவதூறு விடியோக்களை நீக்கக் கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்துவுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவையடுத்து சிங்கமுத்து தரப்பில் தற்போது உத்தரவாதம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கில் வழக்கு
"நான் மற்ற நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிக்க என்னை வடிவேலு அனுமதிக்கவில்லை. என்னைப் பற்றி தவறான தகவல்களை பல தயாரிப்பாளர்களிடம் கூறி எனக்கான திரைப்பட வாய்ப்புகளை அவர் தான் கெடுத்தார். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்க அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்.
நான் அவருடன் இருந்தபோது மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுக்க என்னை அனுமதிப்பதில்லை. ஆனால், அதையும் மீறி பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
நான் வாங்கிக் கொடுத்த ஒரு சொத்தில் வில்லங்கம் இருந்ததால் அதைப் பயன்படுத்தி தனக்கு எதிராகப் போலீசில் புகார் அளித்தார். அந்த சொத்தை வாங்கியதால் வடிவேலுவுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், ரூ.7 கோடியை ஏமாற்றிவிட்டதாக அவர் தனக்கு எதிராக அளித்த புகார் காரணமாக இன்று வரை அந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறேன். நான் வடிவேலுவுக்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.