Mrs Movie: இதெல்லாம் டாக்சிக்.. நாங்க ஏன் வேலை செய்யணும்.. மிசஸ் படத்தை பார்த்து கொதித்த ஆண்கள் உரிமை அமைப்பு..
Mrs Movie: ஆண்கள் தினமும் 8- 9 மணி நேரம் கட்டுமான தளங்கள், ரயில் நிலையங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்துவிட்டு வரும் போது ஏன் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என ஆண்கள் உரிமை அமைப்பான SIFF எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது.

Mrs Movie: மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இந்தி ரீமேக் தான் மிசஸ் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஆரத்தி கடவ் இயக்க, தங்கல் புகழ் நடிகை சன்யா மல்ஹோத்ரா நடித்திருந்தார். இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்டிரீம் செய்யப்பட்டது. இந்தப் படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவாகவும் நெகட்டிவ்வாகவும் விமர்சனங்கள் வந்த வண்ணமே இருந்தன.
இந்நிலையில், ஆண்கள் உரிமை அமைப்பான எஸ்.ஐ.எஃப்.எஃப் - சேவ் இந்தியன் ஃபேமிலி ஃபவுண்டேஷன், படத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்று குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இந்த கருத்து ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.
எஸ்ஐஃப்எஃப் கேள்வி
எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்), எஸ்ஐஎஃப்எஃப் வெளியிட்டுள்ள பதிவில், "கட்டுமான தளங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், உணவகங்கள் மற்றும் நாட்டின் எல்லைகளில் ஆண்கள் 8-9 மணி நேரம் எவ்வாறு வேலை செய்கிறார்கள். ஆனால், ஒரு இளம் பெண்ணுக்கு உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது மற்றும் தனது மாமனாரின் ஆடைகளை துவைப்பது என்பது அடக்குமுறை போல் தெரிகிறதா? எனக் கேள்வி எழுப்பயது.
ஆண்கள் வேலை செய்யக் கூடாது
மேலும், "பணியிடம் என்பது வசதியான குளிரூட்டப்பட்ட இடம் என்று பெண்கள் இயல்பாகவே நம்புகிறார்கள். கட்டுமான தளங்களில் அல்லது ரயில் நிலையங்கள் போன்றவற்றில் வேலை செய்வதை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை "
வீட்டு வேலைகளைச் செய்யும்போது பெண்கள் என்ன மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்?. 70-80% வேலைகளை மிஷின்களே செய்கின்றன. அதனால் ஆண்கள் ஒருபோதும் 50% வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று ஆணித்தரமாக எஸ்.ஐ.எஃப்.எஃப் கூறியது.
பெண்களால் முடிந்தது
இந்த பதிவுக்கு பதிலளித்த படத்தின் ரசிகர் ஒருவர், "கட்டுமான தளங்கள் மற்றும் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் இராணுவத்தில் பெண்கள் வேலை செய்யும் போது வீட்டையும் நிர்வகிக்க முடிந்தது. அப்படி இருந்தால் மட்டுமே அவர்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே வேலையைத் தாண்டி வீட்டு வேலைகளும் கூடுதல் பொறுப்பு. ஆனால், அதே வேலையை செய்யும் ஆண்கள் வீட்டுக்கு வந்து ரவுண்ட் ஹாட் ரொட்டி கேட்பார்கள்.
ஒரு சினிமாவுக்கு ஏன் இவ்வளவு மிரட்டல்..? அவை நிஜ வாழ்க்கையில் எதையும் பாதிக்காது, இல்லையா?? அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களைப் பற்றி பேசும்போது நமக்குச் சொல்லப்படுவது இதுதான். கலை என்பது கலை. கலையை உருவாக்க எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. என்ன பிரச்சினை நண்பர்களே? எனக் கேள்வி எழுப்பினார்.
இது வேலையை பற்றியது அல்ல
மற்றொருவர், தனது ட்விட்டர் பக்கத்தில், "இது வேலை செய்வது பற்றியது அல்ல! அவள் விரும்பியதைச் செய்ய அவளை அனுமதிக்காதது பற்றியது! அவர்களால் தங்களுக்கு விருப்பமான எதையும் செய்ய முடியாமல் போனது பற்றியது. இது வேலையைப் பற்றியது அல்ல!! அவள் மிகவும் திறமையாக வேலை செய்தாள் எனக் கூறினார்.
ஆண்களுக்கு தைரியம் இல்லை
படத்தை டாக்சிக் ஃபெமினிசம் என விமர்ச்சித்தற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர், "மக்கள் ஏன் இதை பெரிதாக்குகிறார்கள்... வெளி வேலைகளைப் பகிர்வது, வீட்டு வேலைகளைப் பகிர்வது, அவ்வளவுதான்...!" "உண்மை கசப்பானது, சமூக ஊடகங்களில் உள்ள ஆண்களுக்கு அதை ஜீரணிக்க தைரியம் இல்லை" என்றார்.
இன்னொரு நபர், "இந்த வேலைகளை எல்லாம் செய்ய என் மனைவியை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அவள் வீட்டு வேலைக்காரி அல்ல. நான் ஒரு வீட்டு உதவியாளரை நியமிப்பேன், அவளுக்கு அதே வேலைகளைச் செய்ய 2 மடங்கு பணம் கொடுப்பேன்" என்றார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்