11 Years of Theeya Velai Seiyyanum Kumaru: சந்தானத்தின் டுவிஸ்ட் கதாபாத்திரம்! காமெடி விருந்து படைத்த சுந்தர் சி படம்
தனது டிரேட்மார்க் ஸ்டைலில் காமெடி விருந்து படைத்த சுந்தர் சி படமாக இருக்கும் தீயாய் வேலை செய்யணும் குமாரு படத்தில் சந்தானத்தின் டுவிஸ்ட் கதாபாத்திரம் காமெடியுடன் கூடிய குறும்புத்தனமான வில்லனிசத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

சுந்தர் சி இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் தீயாய் வேலை செய்யணும் குமாரு. படத்தில் சித்தார்த், ஹன்சிகா, சந்தான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
ஆர்ஜே பாலாஜி, கனேஷ் வெங்கட் ராமன், சித்ரா லட்சுமணன், பாஸ்கி, கருணாகரன், வித்யூலேகா ராமன், விச்சு விஸ்வநாத், ஜெனிபர் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். கேமியோ கதாபாத்திரத்தில் விஷால், சமந்தா, குஷ்பூ, சுந்தர் சி ஆகியோரும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்கள்.
சந்தானத்தின் டுவிஸ்ட்
ஹன்சிகா மீது காதல் வயப்படும் சித்தார்த் அவரை இம்பரஸ் செய்து காதலிக்க சந்தானத்திடம் ஐடியா கேட்கிறார். அதற்கு உதவும் சந்தானம், சித்தார்த் காதலிக்கும் ஹன்சிகா தனது தங்கை என தெரியவருகிறது. இதன் பின்னர் வரும் காமெடி கலந்த டுவிஸ்ட்களுடன், இறுதியில் சித்தார்த் தான் காதலித்த ஹன்சிகாவை கரம் பிடித்தாரா என்பது தான் படத்தின் கதை.
படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையாக அமைந்திருக்கும். காமெடியுடன் கூடிய குறும்புத்தனமான வில்லனிசத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
இந்த படத்துக்கு சுந்தர் சியுடன் இணைந்து சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி, நடிகர் கருணாகரன் உள்பட 6 பேர் கதை, திரைக்கதை அமைத்தனர். காதல், காமெடி கலந்த சரவெடியாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
அதேபோல் கூட்டுக்குடும்பம், சாப்ட்வேர் கம்பெனியில் ஆண், பெண் உறவு குறித்த விஷயங்களை ரசிக்கும் விதமாக சொல்லியிருப்பார்கள்.
தமிழில் உருவான அதே நேரத்தில் தெலுங்கிலும் சம்திங் சம்திங் என்ற பெயரில் படம் உருவானது. தெலுங்கில் சந்தானம் கதாபாத்திரத்தில் பிரம்மாநந்தம் நடித்திருப்பார்.
கலகலப்பு படத்தின் வெற்றிக்கு பிறகு அதேபாணியில் காமெடி கலந்த காதல் படத்தை ரிச்சான பின்னணியுடன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். அதேபோல் தெலுங் பதிப்பில் ராணா டகுபதி கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.
இந்த படத்தின் டைட்டிலை, தனுஷ் புதுப்பேட்டை படத்தில் இடம்பெறும் பிரபல வசனத்தை முன்மாதிரியாக வைத்து தீதீயாய் வேலை செய்யணும் குமாரு என வைத்திருந்தார்கள்.
பாடல்கள் ஹிட்
பா. விஜய் பாடல் வரிகள் எழுத, சி. சத்யா இசையமைப்பில் படத்தில் இடம்பிடித்த பாடல்கள் வரவேற்பை பெற்றன. அழகென்றால், மெல்லிய சாரல் என்ற பாடல்கள் மெலடியிலும், கொழு கொழு, திருட்டு பசங்க, லவ்வுக்கு எஸ் போன்ற டான்ஸ் பீட் பாடல்களும் வரவேற்பை பெற்றன.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
காதல் படமான இது தமிழில் எந்த கட்டும் இல்லாமல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டைய கிளப்பியது.
தெலுங்கில் ஓ மை பிரண்ட் என்ற படத்துக்கு பிறகு ஹாட் ஜோடியாக மாறிய சித்தார்த் - ஹன்சிகா நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுந்தர் சி தனது வழக்கமான ட்ரேட்மார்க்காக இருக்கும் காமெடியை வைத்து ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து படைத்திருந்தார். சித்தார்த் சினிமா கேரியரில் சூப்பர் ஹிட் படமாக மாறிய தீயாய் வேலை செய்யணும் குமாரு வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்