எந்த அப்டேட்டும் இல்ல..நான்கு மணி நேரம் தவிக்கிறாம்! மரியாதை, தெளிவு முக்கியம்.. ஏர்லைன் நிறுவனம் மீது கடுப்பான ஸ்ருதி
எந்த அப்டேட்டும் இல்ல. விமான நிலையத்தில் நான்கு மணி நேரம் தவிக்கிறாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை, தெளிவு தருவது முக்கியம் என பிரபல ஏர்லைன் நிறுவனமான இண்டிகோவை சாடியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

மும்பையில் விமானத்துக்காக நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்ததால் வெறுப்படைந்த நடிகை ஸ்ருதிஹாசன், விமானம் தாமதம் குறித்து ஒரு அப்டேட்டும் தராமல் நானும், சக பயணிகளும் சுமார் நான்கு மணி நேரம் தவித்தோம் என கடும் கோபத்தை இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்தின் மீது வெளிப்படுத்தியுள்ளார்.
விமான நிலையத்தில் சிக்க தவிக்கிறோம்
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "நான் சாதாரணமாக புகார் கூறும் நபர் அல்ல. ஆனால் இன்டிகோ நிறுவனத்தினர், குழப்பத்தில் உங்களை நீங்களே விஞ்சிவிட்டீர்கள்.
கடந்த நான்கு மணிநேரமாக எந்த தகவலும் இல்லாமல் நாங்கள் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறோம். தயவுசெய்து உங்கள் பயணிகளுக்கு ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடியுங்கள்? தகவல், மரியாதை மற்றும் தெளிவை வெளிப்படுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதியின் இந்த எக்ஸ் பதிவை பலரும் ரீ-டுவிட் செய்து, சம்மந்தப்பட்ட ஏர்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை கடுமையாக விமர்சித்தினர்.
ஏர்லைன் நிறுவனம் தரப்பில் விளக்கம்
இந்த விவகாரம் பேசுபொருள் ஆன நிலையில், "விமானம் தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்துக்கு மனதார வருந்துகிறோம். நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு நேரம் எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம்.
மும்பையில் நிலவும் வானிலை காரணமாக விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணிகள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
மேலும் எங்கள் விமான நிலையக் குழு வாடிக்கையாளர்களுக்கு உதவவும் அவர்களின் வசதியை உறுதிப்படுத்தவும் தங்களால் இயன்றதைச் செய்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்" என இண்டிகோ ஏர்லைன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஸ்ருதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கையில் மம்பட்டியுடன் இருக்கும் விதமாக அவரது கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது. கூலி படத்தில் ஸ்ருதிக்கும் ஆக்சன் காட்சிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாவில் சிலம்பம் சுழன்று பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை பகிர்ந்திருந்தார்.
கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கூலி படத்தில் சத்யராஜ், தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா, கன்னட ஹீரோ உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் கான்களில் ஒருவரான அமீர்கான் நடிக்க உள்ளராம். விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.
ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படங்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் பிரபாஸ் நடிப்பில் சலார் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அத்துடன் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் டகோயிட்: ஒரு காதல் கதை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் சென்னை ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தி ஐ என்ற ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதுதவிர சலார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
