‘11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..’ தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்!
பல நேரங்களில் அவரின் செயலை ஜெயலலிதா விரும்பவில்லை. இருப்பினும் ஷிஹான் ஹுசைனி தன் செயல்களை தொடர்ந்தார். அவரை எச்சரித்தும் கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அப்படி என்ன செய்தார் ஷிஹான் ஹுசைனி?

நடிகரும், தற்காப்புக் கலை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி, புற்றுநோயால் காலமானார். இன்று அவரது மறைவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் உயிரோடு இருந்த நாட்களிலும் பல்வேறு பரபரப்புகளுக்கு பெயர் போனார். குறிப்பாக, அவரது செய்கைகளால் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர பக்தராக தன்னை வெளிக்காட்டிய ஷிஹான் ஹுசைனி, ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வினோத செயல்களில் ஈடுபட்டார். அது அவருக்கு பல்வேறு தருணங்களில், பல்வேறு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பல நேரங்களில் அவரின் செயலை ஜெயலலிதா விரும்பவில்லை. இருப்பினும் ஷிஹான் ஹுசைனி தன் செயல்களை தொடர்ந்தார். அவரை எச்சரித்தும் கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அப்படி என்ன செய்தார் ஷிஹான் ஹுசைனி?
ஷிஹான் ஹுசைனி செய்த சம்பவங்களில் சில
- நடுரோட்டில் தன்னுடைய கையில் நூற்றியொரு கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார்.
- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 350 மிலி ரத்தம் என எட்டு வருடங்களுக்கு தன்னுடைய உடம்பில் இருந்து ரத்தத்தை சேகரித்து 11.2 லிட்டர் ரத்தத்தால் ஜெயலலிதாவின் உருவச் சிலையை செய்தார்.
- தன் ரத்தத்தை மட்டுமல்லாது தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் இருந்தும் ரத்தத்தை கட்டாயப்படுத்தி பெற்று சிலை வடித்ததாக புகார் ஆனது
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றபோது, அவர் சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து பிரார்த்தனை செய்தார்.
- ஜெயலலிதா குறித்து இலங்கை அரசு இணையதளத்தில் தவறாகச் செய்தி வெளியிட்டதை எதிர்த்து அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவத்தை பன்றியின் ரத்தத்தால் வரைந்து அதன் கீழ் ராஜபிக்ஷே என்று எழுதினார்
மேலும் படிக்க | Shihan Hussaini: ரத்த புற்றுநோய்.. உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்த ஹூசைனி! விஜய், பவன் கல்யாணை பார்க்க விருப்பம்
அன்றும் இன்றும் ஜெயலலிதாவின் பக்தன்
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது மட்டுமல்லாமது, அவர் இறந்த பிறகும் அவரது நினைவாக, மக்கள் முன்னேற்ற அமைப்பு(AMMA) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் தன் ஜெயலலிதா விசுவாசத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கருத்துக்கள், பேச்சுகள், செய்கைகளால் பேசப்பட்ட ஷிஹான் ஹுசைனி, இன்று மூச்சை நிறுத்தியுள்ளார். அவர் ஒரு திறமையான தற்காப்பு கலைஞர். ஆனால், புற்றுநோயிலிருந்து அவரால் தற்காத்துக் கொள்ள முடியாமல் போனது தான் வேதனையான விசயம்.

டாபிக்ஸ்