Game Changer vs vanangaan: அதளபாதாளத்தில் டிக்கெட் புக்கிங்;2 வது நாளே இப்படியா? - காத்து வாங்கும் கேம் சேஞ்சர் வணங்கான்
கேம் சேஞ்சர், வணங்கான் திரைப்படங்களுக்கு மக்கள் போதிய வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் திரையரங்குகள் காத்து வாங்கிக்கொண்டிருக்கின்றன.
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் பல திரைக்கு வந்திருக்கின்றன, வரவிருக்கின்றன.
இந்த ரேசில் முதலாவதாக இயக்குநர் பாலாவின் வணங்கான் திரைப்படமும், ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படமும் களமிறங்கின; நேற்று வெளியான இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்த்த மக்கள், இரண்டு படங்களுக்கும், கலவையான விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர்.
பொதுவாக வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களின் விமர்சனங்களை பொறுத்தே, அந்தந்த திரைப்படங்களுக்கு வார விடுமுறை நாட்களில் மக்கள் வருவர்; அப்படி இருக்கும் பட்சத்தில், வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் மக்களின் விமர்சனம் சராசரியாக அமைந்த காரணத்தினால், திரையரங்குகளில் இந்தப்படங்களுக்கு பெரிதான டிக்கெட் புக்கிங் இல்லை.இதனால் இன்று மாலை மற்றும் இரவு காட்சிகளில் பெரும்பான்மையான திரையரங்குகளில் மக்கள் வரத்து இல்லை; இதனால், திரையரங்கங்கள் காத்து வாங்கிக்கொண்டிருக்கின்றன.
பாலாவின் வணங்கான்
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவ் விமர்சனங்கள் என தன்னுடைய கெரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் இவர், சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் குளிப்பதை ஆண்கள் சிலர் பார்ப்பதையும், அதை பொறுத்துக்கொள்ள முடியாத கதாநாயகன் அவர்களுக்கு கொடுத்த தண்டனையையும், விசாரணையில் கதாநாயகன் சொன்னதையும் வைத்து கதை நகர்த்தி இருக்கிறார் பாலா
ஷங்கரின் கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கி இருக்கும் அரசியல் த்ரில்லர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்; தந்தை மற்றும் மகன் என 2 வேடங்களில் நடித்து திறமையை நிரூபித்துள்ள ராம் சரண் இந்தப்படத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.அரசியலை சுத்தப்படுத்த முயற்சிக்கும் கதைக்களத்தை கேம் சேஞ்சர் படம் முன்னிறுத்தி இருக்கிறது.
க்ரைமில் தொடங்கும் கதை
காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பெண்பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல்நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி! அதன் பின்னர் என்ன ஆனது? அவன் என்ன காரணத்திற்காக அந்த கொலையை செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி, துருவி கேட்கிறது. அதற்கு கோட்டி பதில் சொன்னானா இல்லையா என்பது தான் படத்தின் கதை!
பாலாவின் வண்ணத்தில் முற்றிலும் அருண் விஜய் வேறு ஒருவராய் தெரிகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் மொழியை அச்சு அசலாக வெளிப்படுத்தியது சிறப்பு. அவரின் காதலியாக நடித்திருக்கும் ரோஷினி என்டர்டெய்ன்ட்மெண்ட்டுக்கு கேரண்டி; அவரின் தங்கையாக நடித்திருப்பவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். மிடுக்கான போலீசாக சமுத்திரக்கனி, நேர்மையான நீதிபதியாக மிஷ்கின் கொடுத்த கதாபாத்திரங்களை செவ்வென செய்திருக்கிறார்கள்.
பாலா அப்டேட் கேள்விக்குறி
வழக்கம் போல, பாலாவுக்கான வன்முறை படம் முழுக்க பரவிக்கிடக்கிறது. அவ்வபோது வந்து விழும் அவரிக்கே உரித்தான ராவான கவுண்டர்கள் தியேட்டரை சிரிக்க வைக்கிறது; ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான மொழியில் நடிக்க வைத்திருப்பது கவனம் ஈர்த்து இருக்கிறது.
முதல் பாதி ஓரளவு சுவாரசியமாக இருந்தாலும், கதைக்குள் செல்ல அதை முழுவதையும் பாலா எடுத்துக்கொண்டது அபத்தம். இது பாலா அப் டேட் ஆக வேண்டும் என்பதை காட்டி இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தை வைத்து பாலா அடித்த சில காமெடிகளை அவர் தவிர்த்து இருக்கலாம்.
இரண்டாம் பாதியில் அருண் விஜய் என்ன ஆனார்?.. அவன் சொன்னது என்ன? அவனிடம் இருந்து காரணத்தை பிடுங்க நினைக்கும் சமுத்திரக்கனி செய்தது என்ன? நேர்மையான நீதிபதி அவனுக்கு கொடுத்த தண்டனை உள்ளிட்ட மூன்று முடிச்சுகளை கொண்டு திரைக்கதை நகர்த்தி இருக்கிறார் பாலா.. அவை சுவாரசியமாக இருந்தாலும், பாலாவுக்கு உரித்தான டச் படத்தில் பல இடங்களில் மிஸ்ஸிங்! பாடல்கள் ஓ கே ரகம்தான். பின்னணி இசையில் சாம் சி எஸ் சிறப்பான பணியை செய்திருக்கிறார். கதையின் மையக்கரு இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால், படம் இன்னும் நம்மை ஆழமாக சென்று சேர்ந்து இருக்கும்
டாபிக்ஸ்