HTTAMIL EXCLUSIVE: ‘சாதி படங்கள் முக்கியம்..உங்க தனுஷ் இப்ப எங்க தனுஷ் ஆகிட்டார்’ - குபேரா டைரக்டர் சேகர் கம்முலா பேட்டி
HTTAMIL EXCLUSIVE: இது உண்மையிலேயே நல்ல விஷயம். எங்கெல்லாம் ஒடுக்குமுறை நடக்குதோ, அங்கெல்லாம் கலை அதனை வெளிச்சம் போட்டு காண்பிக்கும். - குபேரா டைரக்டர் சேகர் கம்முலா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

HTTAMIL EXCLUSIVE: தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுபவர் சேகர் கம்முலா. கதையையும், கதை மாந்தர்களையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் இந்த படைப்பாளியின் ‘ஆனந்த்’ ‘ஃபிடா’ ‘லீடர்’ ‘கோதாவரி’ ‘ஹாப்பி டேஸ்’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.
காதல், சாதி, அரசியல் என அனைத்தையும் கையில் எடுத்து எழுதும் இவரின் கதாபாத்திரங்கள் தெலுங்கு சினிமாவுக்கான முகத்தை மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது தனுஷ் - நாகர்ஜூனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். ஹைதராபாத்தில் நடந்த ரெட் லாரி திரைப்பட விழாவில் அவர் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து…
மாஸ் - மசாலா திரைப்படங்களுக்கு பேர் போனது தெலுங்கு திரைத்துறை.. இப்படிப்பட்ட துறையில் சமூக பிரச்சினைகளை திரையில் பேசலாம் என்ற தைரியம் எப்படி வந்தது?
அதுக்கு காரணம் நான் என் கதை மேல வச்சிருக்குற நம்பிக்கை. ‘ஆனந்த்’ படம் எடுக்கும் போது, இந்தக்கதையை கட்டாயமா சொல்லியே தீரணும்னு என் உள்ளுணர்வு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு எண்ணம் ஒரு முறை உங்க மண்டைக்குள்ள போயிருச்சுன்னா போதும். மத்தெல்லாம் தானா நடக்கும்.
‘ஆனந்த்’ படத்தோட கதையை நிறைய பேருக்கு சொல்லியிருப்பேன். ஆனா, எங்கேயும் வொர்க் அவுட் ஆகல.. கடைசியா அந்தப்படம் எப்படியோ உருவாச்சு. என்னுடைய உள்ளுணர்வுதான் அந்தப்படத்த உருவாக்குச்சுன்னு நினைக்கிறேன்.
நீங்க உங்க கன்டெண்ட ஆழமா நம்புனீங்கன்னா, உங்க கதையை மக்களுக்கு சொல்லியே தீரணும்னுங்கிற முடிவுல உறுதியா நினைச்சீங்கன்னா அந்தப்படம் நிச்சயம் நடக்கும்.
உங்களுடைய கதாபாத்திரங்கள் அழுத்தம் நிறைந்தவையா இருக்கே?
அவங்கெல்லாமே தினசரி வாழ்கையில நாம சந்திக்கிற கதாபாத்திரங்கள்தான். நம்ம சமுதாயத்துல நமக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு. அந்த பிரச்சினைகளை கதைகளாக சொல்ல நினைக்கும் போதே, இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தானாக உருவாகிரும். இந்த மாதிரி பல கதாபாத்திரங்கள பாலச்சந்தர் சார் படங்கள்ல பார்க்க முடியும்.
தினசரி வாழ்க்கையில் வாழும் சாதரண பெண்மணி எப்படி வேலைக்கு போறாங்க.. எப்படி வீடு திரும்புறாங்க அப்படிங்கிறத மட்டும் கவனிச்சிங்கனாலே உங்களுக்கு அதுல இருந்து ஒரு கதை கிடைக்கும்.
பணமில்லாமல் வறுமையோட பிடியில் இருக்கும் குடும்பத்தை கவனிச்சா, அங்க இருந்து ஒரு கதை கிடைக்கும். இப்படி பல எ.காட்டுகள என்னால சொல முடியும். துர்திருஷ்டவசமா இந்தியாவுல நிறைய மதங்கள், நிறைய சாதிகள், அரசியல் சித்தாந்தங்கள், வேற்றுமைகன்னு பல விஷயங்கள் இருக்கு. என்னுடைய கதைகள் அங்கிருந்துதான் வருது.
சாதி ரீதியான படங்களை எடுப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
இது உண்மையிலேயே நல்ல விஷயம். எங்கெல்லாம் ஒடுக்குமுறை நடக்குதோ, அங்கெல்லாம் கலை அதனை வெளிச்சம் போட்டு காண்பிக்கும். இந்த விஷயத்தில் எது சரி, எது தவறு என்பதை அப்படிங்கிறத சொல்லும் கடமை ஒவ்வொரு ஃபிலிம் மேக்கரும் இருக்கு. அதை பா.ரஞ்சித்தும், மாரிசெல்வராஜூம் செய்றதுல எனக்கு மகிழ்ச்சி. அவங்க இரண்டு பேருமே மிகச்சிறந்த படைப்பாளிகள்.
மேலும் படிக்க | தனுஷின் குபேரா படம் ரீலிஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!
குபேரா எப்படி வந்துட்டு இருக்கு? என்ன சொல்றார் தனுஷ்?
தனுஷூக்கு நாம ரொம்ப மெனக்கிட வேண்டாம். காரணம், அவரே சூப்பரான ஆக்டர்தான். அவர் என்ன பண்ணாலும் அத ஸ்கீரின்ல பார்க்கும் போது, அது எனக்கு வேற மாதிரி இருக்கு.
உங்க தனுஷ், இப்ப எங்க தனுஷூம் ஆகிட்டார். (சிரிக்கிறார்). குபேரால அவர் ரொம்ப சிறப்பான வேலையை செஞ்சிருக்கார். நாகர்ஜூனா, தனுஷ் காம்போ நடிப்பு, படத்துல மேஜிக் மாதிரி வந்திருக்கு. ’ என்று பேசி விடைபெற்றார்.
குபேரா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலில் உருவாகி வருகிறது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷூடன் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில், சுனில் நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

டாபிக்ஸ்