‘நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. கேவலமா இல்லையா...? அந்த தொழிலதிபரை கூட்டி வா..மோதி பாத்துருவோம்’ -சீமான்!
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. நீ யார் முதலில்… நான் உன்னிடம் மன்னிப்பு கேட்பதற்கு... தவறு செய்தது நீ… தொழிலதிபரை வைத்து தூது விட்டேன் என்று சொல்கிறாய் அல்லவா? .. அந்த தொழிலதிபரை இங்கு கூட்டி வா..’ - கொதித்த சீமான்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டர்களோடு இணைந்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விதியை மீறியதால், சீமான் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்.
நம்ப தயாராக இல்லை
அவர் பேசும் போது, ‘எப்போதும் இது போல போராட்டங்களின் போது, கைது நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும். அந்த சமயங்களில் எங்களை கூடாரத்தில் அடைப்பார்கள்; பின்னர் விடுதலை செய்வார்கள். ஆனால் இம்முறை எங்களை ஊடகத்தினரை சந்திக்கக் கூடாது என்றார்கள். இது என்ன மாதிரியான அடக்குமுறை என்பது எனக்கு தெரியவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சாஃப்ட்வேரில் பிரச்சினை என்று கூறுகிறார்கள். அதை மத்திய அரசே கூறிவிட்டது என்று வேறு கூறுகிறார்கள். ஆனால் இது போன்ற விவகாரங்களில் இது போன்ற சாக்குப் போக்குகள் வருவது இயல்பாக இருக்கிறது. ஆகையால் அதை நாங்கள் நம்ப தயாராக இல்லை.
இதற்கு முன்னர் திமுகவினர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடநாடு விவகாரம் உள்ளிட்டவற்றில் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்கள். இப்போது வரை அவர்கள் அது தொடர்பாக இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்திலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த போது நடந்த அட்டூழியங்களை இதனுடன் ஒப்பீடு செய்து போடுகிறார்கள்; இங்கு என்ன இசை கச்சேரி நடத்துகிறார்கள்’ என்றார்.
நீ யார்?
டி ஐ ஜி வருண்குமார் நேற்றைய தினம் சீமான் பொதுவெளியில் மன்னிப்புக்கேட்டாலும், அவரை நான் சும்மா விடமாட்டேன் என்று பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், ‘அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?
நீ யார் முதலில்… நான் உன்னிடம் மன்னிப்பு கேட்பதற்கு... தவறு செய்தது நீ… தொழிலதிபரை வைத்து தூது விட்டேன் என்று சொல்கிறாய் அல்லவா? .. அந்த தொழிலதிபரை இங்கு கூட்டி வா.. நீதான் பத்திரிகையாளர்களை விட்டு காவல் அதிகாரிகளை விட்டு என்னிடம் கெஞ்சினாய்.
நான் எதற்காக அவரை சந்திக்க வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டேன். நீ நேருக்கு நேராக நின்று என்னுடன் பேசு தயாரா? நீதான் அதிகாரிகளை விட்டு பிரச்சினை வேண்டாம் முடித்து விடுங்கள் என்று கெஞ்சினாய்.. நான் உனக்கு கொலை மிரட்டல் விடுத்தேன் என்று கூறியிருக்கிறாய்; நீ தான் துப்பாக்கி வைத்திருக்கிறாயே.. உனக்கு பின்னால் பெரிய பட்டாளமே இருக்கிறது; பின்னர் எனக்கு பாதுகாப்பு இல்லை கூறுவதற்கு உனக்கு கேவலமாக இல்லையா...?
நீ சரியான ஆண்மகனாக இருந்தால் எனக்கு தண்டனை வாங்கி கொடுத்து விடு.. எல்லோருக்கும் பணியிட மாறுதல்கள் நடக்கின்றன; ஆனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் மட்டும் அருகருகில் டிஐஜியாக புரமோஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்தான் என்னுடைய கட்சியிலிருந்து பல செல்போன்களை திருடி அதிலிருந்து ஆடியோக்களை வெளியிட்டவர்.திமுகவை நம்பி அவர் ஆடிக் கொண்டிருக்கிறார்; 2026க்கு பிறகு அவர்கள் எல்லாம் என்ன ஆகப் போகிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள்’ என்று பேசினார்.
டாபிக்ஸ்