‘கமல் மன்னிப்பு கேட்கணுமா.. இதுவா உங்க வேலை…’ - கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட உத்தரவிட்டது.

நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை “நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடை” என்று தெரிவித்த நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய திரைப்பட சான்றிதழ் சான்றிதழ் பெற்ற எந்தவொரு படமும் வெளியிடப்பட வேண்டும் என்றும் அதன் திரையிடலை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது.
மேலும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல.. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்?என்று கூறியிருக்கிறது.