Sathyaraj: பெரியாரை பற்றி புலம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. விடியோ பகிர்ந்த சத்யராஜ்
Sathyaraj Video: பெரியார் குறித்து சர்ச்சை கருத்து பேசியிருக்கும் சீமானுக்கு பதிலடி தரும் விதமாக விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சத்யராஜ். தனது ஸ்டைலில் சீமானின் பெயரை குறிப்பிடாமலேயே அவரை ட்ரோல் செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். திராவிடத்தை, பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை என்று பேசினார்.
சீமானின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியார், திராவிடத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, சீமான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தனது பாணியில் நக்கல் அடித்துள்ளார்.
சத்யராஜ் பகிர்ந்திருக்கும் விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "தந்தை பெரியாரின் திராவிட கருத்தியல் அடிநாதமான சமூக நீதி கோட்பாட்டை பொது மேடைகளில் உண்மையான விளக்கத்தை சொல்லி, அதில் இந்த குறைகள் இருக்கிறது, தவறுகள் இருக்கிறது, நாங்கள் வந்தால் இதை மாத்தி காட்டுவோம் என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.
ஏதோ அரசியல் பண்ணனுமேன்னு புதுசு புதுசா பேசுறவங்கள பார்த்த கோபமே வரல. பரிதாபம் தான் வருது. நூறு வருஷமா பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரே ஆளு பேச முடியாதுல்ல. அப்பப்போ புதுமுகங்கள் வந்து தான் ஆகும்.
சமூக நீதி கோட்பாட்டை, திராடவிட கருத்தியலை மிக பெரிய அளவில் அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். பெரியார் கருத்தியல் பற்றி ராகுல் காந்தி பார்லீமெண்டில் பேசியிருக்கிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வைக்கம் போராட்ட வீரரான பெரியாருக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் விழா நடத்தி காட்டினார்.
திராவிடம் பெயர் இருந்தாலே பெரியாரை ஆதரிப்பார்கள்
திராவிடம்ன்னு பெயர் இருக்கிற கட்சிகள் அனைத்தும் பெரியாரை ஆதரிப்பார்கள். ஆனால் இன்னைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டார். எங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் தான் என சொல்லியுள்ளார்.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அற்புதமான அறிக்கை வெளயிட்டுள்ளார். அவர் முன்மொழிந்ததை வழிமொழிகிறேன். மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தந்தை பெரியாரின் சமூக நீதி கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, வெளிப்படுத்தியும் உள்ளார்.
எனது அன்பு தம்பி விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்தபோது எங்களது கொள்கை தலைவர் தந்தை பெரியார் தான். திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று சொல்லியிருக்கிறார்.
புலம்பல்களுக்கு ஆழந்த அனுதாபங்கள்
இவ்வளவு பேர் சொன்னதுக்கு பிறகும் பெரியாருக்கு எதிராகவும், திராவிட கருத்தியலுக்கு எதிராக புலம்புபவர்களை பார்த்து பரிதாப்பபட்டு, ஆழ்ந்த அனுதாபங்களை தான் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் இந்த கருத்தியல் மீது யாருக்கும் விமர்சனம் இல்லை. தனி மனித போக்கில் விமர்சனம் மட்டும்தான் உள்ளது. இதை இத்தனை கட்சியும் நிருபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. ஆனால் புலம்பல்களுக்கு, புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்." இவ்வாறு சத்யராஜ் பேசியுள்ளார்.
பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு
டலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், "பெரியார் என் தாத்தா என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் மாறி மாறி பேசுகிறீர்கள்?" என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், "ஆமாம் நான் சொன்னேன். அது தப்பு. பெரியார் என்ன சீர்திருத்தம் செய்துவிட்டார்?.. இப்போ என்ன பண்ணலாம் ? நான் மாறி மாறி பேசவில்லை. நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால் தெளிவு வருகிறது. என் இனச் சாவில்தான் இவர்களெல்லாம் திருட்டுப் பையன் என்று தெரிய வருகிறது.
என் தலைவனை 2008 பிப்ரவரி மாதம் நான் சந்திக்கும் வரை நானும் இந்த திராவிட திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருந்தேன். அவரை சந்தித்தப் பிறகுதான் தமிழன் என்றால் யார், தமிழ் தேசியம் என்றால் என்ன? தமிழருக்கு தேவையான அரசியல் என்ன என்று தெரிந்த பிறகுதான் இந்த அரசியலை கட்டமைக்கிறேன். அதற்கு குறுக்கே வந்து, இது பெரியார், இது திராவிடம் மாடல், பெரியார் இல்லை என்றால் ஒன்றுமில்லை என்று சொல்வதா?
திராவிடம் என்று கூறியவர்கள் திருடர்கள். பெரியார் சாதி ஒழிப்பு பற்றி பேசினார். பெரியார் பெண்ணியம் பற்றி பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார் தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? .. சிங்காரவேலர், ஜீவானந்தம், இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கக்கன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?. மண்ணின் விடுதலைக்காக சொத்தை விற்றவர் என் பாட்டன் வ.உ.சி. ஆனால் தன்னுடைய சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் பெரியார். திராவிடத்தை, பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை" என்று பேசினார்.
சீமான் - சத்யராஜ் படம்
சத்யராஜ் முன்னணி ஹீரோவாக இருந்த போது சீமான் இயக்கத்தில் வீரநடை என்ற படத்தில் நடித்தார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த படத்தில் குஷ்பு, கவுண்டமணி, செந்தில், அருண்பாண்டியன், பொன் வண்ணன், சந்திரசேகர் உள்பட பலரும் நடித்திருந்தார்கள். ரசிகர்கள் கவர்ந்த இந்த படம் சராசரி படமாக இருந்து வருகிறது. சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், சீமானும் படங்கள் இயக்குவதை கைவிட்டு முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடையை செய்திகள்