திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது.
இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சவாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்கு சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை, இதனையடுத்து இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேக விழா இன்று (மே.31) காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. இசைஞானி இளையராஜாவுக்கு 80 வயது தொடங்கியதை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி 84 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதில், மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரணி மற்றும் சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் பிரபல நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பங்கேற்றனர்.
டாபிக்ஸ்