Santhanam speech: சங்கீதாவ லவ் பண்ணா நான் சங்கியா? - செய்தியாளருடன் முட்டிய சந்தானம்!
“படத்தில் எந்த ஒரு கோயிலை பற்றியும் தவறாக நாங்கள் காண்பிக்கவில்லை.” - சந்தானம்!
டிக்கிலோனா படத்தை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக். இவர் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.
மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம் பெற்று இருந்த வசனம் பெரியாரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து அது யார் மனதையும் புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டதில்லை என்று சந்தானம் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்தப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட சந்தானம் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “ படத்தில் எந்த ஒரு கோயிலை பற்றியும் தவறாக நாங்கள் காண்பிக்கவில்லை.
கடவுள் நம்பிக்கையை வைத்து காசு சம்பாதிப்பதும், அதனை அரசியல் மற்றும் பிரச்சினைகளுக்கு பயன்படுத்துவதும் தவறு. அதைத்தான் இந்தப்படத்தில் காண்பித்து இருக்கிறோம். ” என்றார்
சங்கி என்று சிலரை அழைக்கிறார்களே?
தொடர்ந்து பேசிய சந்தானம், “நான் பள்ளிக்காலத்தில் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அவர் பெயர் சங்கீதா. அவரை நான் சங்கி சங்கி என்று தான் அழைப்பேன். அதற்காக நான் சங்கி ஆகிவிடுவேனா என்ன?
என்னுடைய இயல்பே என்னை சுற்றி உள்ளவர்களை சிரிக்க வைப்பது தான். அந்த ஒரு பண்புதான் எனக்கு விஜய் டிவியில் ஒரு வாய்ப்பை வாங்கித் தந்தது.அதை பார்த்து தான் சிம்பு எனக்கு மன்மதன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார் அதன் பின்னர் சினிமா என்பது என் கையில் வந்தது. நான் உங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்