ரஜினி - ராமதாஸ் சமாதானம் ஆகிவிட்டார்கள்.. தேவையில்லாத சர்ச்சை வேண்டாம் - அலங்கு படம் பற்றி சங்கமித்ரா பேச்சு
ரஜினி - ராமதாஸ் என இரு குடும்பத்தினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். எனவே தேவையில்லாத சர்ச்சை வேண்டாம் என்று அலங்கு படம் செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கமித்ரா ராமதாஸ் பேசியுள்ளார்.
2024ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான நாள் கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் த்ரில்லர் படமான அலங்கு வெளியாகிறது. இந்த படத்தை டிஜி பிலிம் கம்பென் மற்றும் மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா ராமதாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளான சங்கமித்ரா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் பங்கேற்று படம் குறித்து பேசினார்கள்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா ராமதாஸ், படத்தின் பணியாற்றிய ஒவ்வொரு டெக்னீஷியன்கள் பெயரையும், அவர்கள் பணியையும் குறிப்பட்டு நன்றி தெரிவித்தார். அத்துடன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
ரஜினிகாந்துக்கு நன்றி
தொடர்ந்து பேசிய அவர், "எங்களை வாழ்த்த வந்த மிஷ்கின், தமிழரசன், அருன் விஷ்வாவுக்கு நன்றி. ட்ரெய்லரை பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த்க்கு நன்றி. இந்த டீம் இருந்ததால் தான் படம் நடந்தது. அலங்கு படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னவுடன், இதை அப்படியே திரையில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எங்கள் வீட்டில் இருப்பவர்கள் பெருமைப்படும் விதமாக படம் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி.
சோழர் காலத்தில் போர் நாய்
அலங்கு என்ற வார்த்தைக்கான அர்த்தம் பலருக்கு தெரியாது. ஆனால் இந்த டைட்டில் பலருக்கு ரீச் ஆகியுள்ளது. அலங்கு என்பது போர் நாய் ஆகும். சோழர் காலத்தில் போர் நாயாக இருந்துள்ளது. இந்த பெயர் மக்கள் மனதில் பதிந்திருப்பது மகிழ்ச்சி. செய்தியாளர்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.
அனைவருக்குமான படங்களை எடுப்பதே விருப்பம்
முன்னதாக, அலங்கு படத்தின் சிறப்பு காட்சி செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களுடனான உரையாடல் நடத்தப்பட்டது. அப்போது சங்கமித்ரா ராமதாஸ் பேசும்போது, "எல்லா மக்களுக்குமான படத்தை எடுக்கவே எனக்கு விருப்பம். தவறாக யாரையும் குறிப்பிட மாதிரி படம் எடுக்காமல் அனைவருக்கும் பிடித்தமான எண்டர்டெயின்மென்ட் படங்களை எடுப்பேன். ட்ரெய்லரை பார்த்த ராமதாஸ் தாத்தா நன்றாக இருப்பதாக சொன்னார்".
தேவையில்லாத சர்ச்சை வேண்டாம்
அப்போது, டாக்டர் ராமதாஸ் சினிமாக்களை எதிர்ப்பவர். ரஜினியின் சினிமா படப்பெட்டியை தூக்கியவர் என்று கேள்வி கேட்டபோது, "தேவையில்லாத சர்ச்சைக்கு போக வேண்டாம். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் சரியாகிவிட்டார்கள். இரு தரப்பினர் வீட்டின் திருமணத்துக்கும் மாறி மாறி சென்றுவிட்டார்கள். அலங்கு என நல்ல படத்தை கொடுத்திருப்பதாக நம்புகிறோம். இதற்கு ஆதரவு தாருங்கள். வேறு விஷயங்களை பேசி திசை திருப்ப வேண்டாம்" என்று கூறினார்.
கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
அலங்கு படத்தை கடந்த சில நாள்களுக்கு முன்னரே பார்த்திருந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாயின் மீதான மனிதனின் காதல் பற்றிய பழமையான மற்றும் கிராமிய அதிரடித் திரைப்படமாக அலங்கு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் நடிகர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் தளபதி விஜய்யை சந்தித்த அலங்கு படக்குழுவினர், அவருக்கு படத்தின் டிரைலரை போட்டுக்காட்டி வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து அலங்கு சிறப்பு போஸ்டரையும் அவரை வைத்து வெளியிட்டனர்.
அலங்கு படம்
தமிழ்நாடு - கேரளா எல்லையில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டிருக்கும் அலங்கு படத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சத் அப்பானி உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை - அஜீஷ். படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.
டாபிக்ஸ்