Samantha Ruth Prabhu: ‘வெறுப்பும், விஷமும் கொண்ட நபரால் அந்த பையன் வாழ்க்கையே.. அப்படியே நொறுங்கிட்டேன்’ -சமந்தா
Samantha Ruth Prabhu: மிஹிரின் மரணம் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் ராகிங் உள்ளிட்டவை, 'பாதிப்பில்லாத மரபுகள்' அல்லது 'சடங்குகள்' அல்ல என்பதை நினைவூட்டுகிறது. - சமந்தா ஆதங்கம்!

கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ராகிங்கால் தற்கொலை செய்து கொண்ட மிஹிர் அகமதுவின் தாய் பதிவிட்ட பதிவு குறித்து, சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கேரள மாநிலம் திருப்புனித்துராவில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 15 வயதான மிஹிர் அகமது படித்து வந்தார். இந்த நிலையில் அவர் சக மாணவர்களால் ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், இந்த கொடுமை தாங்க முடியாமல் அவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தாய் வேதனை
இந்த விவகாரம் குறித்து மிஹிர் தாயார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதில் அவர், சகமாணவர்கள் ராகிங் என்ற பெயரில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகவும், தன்னுடைய மகனை கழிப்பறை இருக்கையை கட்டாயப்படுத்தி நக்க வைத்ததாகவும், அவனுடைய தலையை அதற்கு புகுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், மிஹிர் இறந்ததையும் அவர்கள் கொண்டாடியதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் கேரளகாவல்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
நொறுக்கி விட்டது.
இந்த விவகாரம் குறித்து மிஹிர் தாயார் வெளியிட்ட குறிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சமந்தா, ‘இந்த செய்தி என்னை முற்றிலும் நொறுக்கிவிட்டது. இது 2025. ஆனாலும், வெறுப்பும், விஷமும் நிரம்பிய ஒரு சில தனிநபர்கள் ஒருவருக்கு இழைத்த கொடுமையால், மற்றொரு பிரகாசமான இளைஞரின் வாழ்க்கையை நாம் இழந்து இருக்கிறோம்.
மிஹிரின் மரணம் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் ராகிங் உள்ளிட்டவை, 'பாதிப்பில்லாத மரபுகள்' அல்லது 'சடங்குகள்' அல்ல என்பதை நினைவூட்டுகிறது. இவை வன்முறை - உளவியல், உணர்ச்சி மற்றும் சில நேரங்களில், உடல் ரீதியானவை. ராகிங்கிற்கு எதிரான கடுமையான சட்டங்கள் நம்மிடம் உள்ளன; இருப்பினும் எங்கள் மாணவர்கள் பேச பயப்படுகிறார்கள்.
மௌனமாக பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பயப்படுகிறார்கள். யாரும் கேட்க மாட்டார்கள் என்ற பயத்தில் மௌனமாக பாதிக்கப்படுகிறார்கள். நாம் எங்கே தவறுகிறோம்?; அதிகாரிகள் இதன் ஆணிவேருக்குச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அமைப்பால் உண்மை மௌனமாக்கப்படாது என்று நான் நம்புகிறேன்.
மிஹிருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது பெற்றோருக்கு முடிவு கிடைக்க வேண்டும். கண்டிப்பான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் அவர், ‘மௌனம் துஷ்பிரயோகத்தை செயல்படுத்துகிறது. கொடுமைப்படுத்தப்படுபவர்கள் உதவியை கோருங்கள். நம் குழந்தைகளுக்கு பச்சாத்தாபம் மற்றும் கருணை, பயம் மற்றும் அடிபணிதல் ஆகியவற்றைக் கற்பிப்போம். இந்த மரணம் ஒரு விழிப்புணவுக்கான அழைப்பாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி என்பது, வேறு எந்த மாணவரும் இதே வலியைத் தாங்கக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும். அந்த அளவுக்கு நாங்கள் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்