பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு மீண்டும் கொலை மிரட்டல்! மன்னிப்பு அல்லது ரூ5 கோடி பணம்!போன் காலில் மிரட்டல்!
லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறி ஒருவரிடமிருந்து மும்பை போலீஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுக்கு வந்த அழைப்பில் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கொன்ற மானிற்காக கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கொலை கும்பலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று(நவம்பர் 4) ஒரு தனிநபரிடமிருந்து கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று ஒரு அழைப்பு வந்தது. அந்த காலில் பேசிய நபர் நாங்கள் விதிக்கும் சில கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால் சல்மான் கான் கொல்லப்படுவார் என்று மிரட்டினார்.
மிரட்டலில் “சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் (பிஷ்னோய் சமூகம்) கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவனைக் கொன்று விடுவோம்; எங்கள் கும்பல் இன்னும் செயலில் உள்ளது,” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மிரட்டல் செய்தியின் தோற்றம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும், சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த செய்தி தொடர்புள்ளதா என்பதையும் போலீசார் சோதித்து வருகின்றனர்.
“நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில், வொர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. செய்தி வந்த எண் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது” என்று மும்பை காவல்துறையை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் கொலை மிரட்டல்
கடந்த மாதம், பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ரூ.2 கோடி ரூபாய் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கொலை மிரட்டல் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி மும்பையின் பாந்த்ராவில் வசிக்கும் ஒருவரை அக்டோபர் 30 ஆம் தேதி காவல் துறை கைது செய்தது. மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு அக்டோபர் 29 அன்று ஒரு மொட்டை செய்தி கிடைத்தது, அதில் அனுப்பியவர் சல்மானை ரூ.2 கோடி கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்.
அடையாளம் தெரியாத நபர் மீது வொர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடுத்த நாள், பாந்த்ராவில் (கிழக்கு) வசிக்கும் ஆசம் முகமது முஸ்தபா என அடையாளம் காணப்பட்ட ஒருவரை, சல்மான் கானுக்கு சமீபத்திய கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரிடமிருந்து ரூ.2 கோடி கேட்டதற்காகவும் போலீசார் கைது செய்தனர்.
சல்மான் மீதான தாக்குதல்
மும்பையின் ஆடம்பரமான பகுதியான பாந்த்ராவில் (மேற்கு) உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் சல்மான் கான் வசிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த மாதம், மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணிற்கு கொலை மிரட்டல் செய்தி வந்தது. அப்போது மிரட்டல் செய்தி தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் மற்றொரு வழக்கில், சல்மான் கான் மற்றும் என்சிபி தலைவர் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
டாபிக்ஸ்