'வீட்டிற்குள் நுழைந்து கொலை.. வெடிகுண்டு தாக்குதல்'.. தொடர் அச்சுறுத்தலில் தவிக்கும் சல்மான் கான்..
நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்று, அவரது காரை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று அடையாளம் தெரியாத நபர்கள் மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி திங்கள் காலை, மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில், அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்று, அவரது காரை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று கூறப்பட்டுள்ளது. மும்பை போலீசார் இது குறித்து புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
திங்கள் காலை பல செய்தி சேனல்கள், சல்மான் கானுக்கு அறியப்படாத நபர் ஒருவரிடமிருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டன. மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்பட்ட செய்தியில், நடிகரை அவரது வீட்டில் கொலை செய்ய உள்ளதாக மிரட்டப்பட்டுள்ளது. நடிகர் தனது குடும்பத்துடன் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.
துப்பாக்கி சூடு
கடந்த ஆண்டு, பிஷ்ணாய் கும்பலைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கல் சல்மான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதைத் தொடர்ந்து, சல்மான் கானிந் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது ஐந்தாவது முறையாக நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை போலீசார் புகார் அளித்துள்ளனர். மிரட்டல் செய்திக்கான காரணத்தை கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிக்கடி கொலை மிரட்டல்
கடந்த இரண்டு ஆண்டுகளில், சல்மான் கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது தந்தை சலீம் கான் உள்ளிட்டோர், ஏராளமான கொலை மிரட்டல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு, நடிகரை அவரது பன்வெல் பண்ணை வீட்டில் கொல்ல திட்டம் தீட்டப்பட்டதையும் மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். லாரன்ஸ் பிஷ்ணாய் கும்பலைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடிகர் சல்மான் கானைப் பின்தொடர்ந்து அவரைக் கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
கொலை மிரட்டலுக்கான காரணம்
லாரன்ஸ் பிஷ்ணாய் நடிகர் மீது வெளிப்படையாக வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது 90களில் நடிகர் மீது சுமத்தப்பட்ட கருங்காட்டு மான் வேட்டை வழக்கில் இருந்து உருவானது. கருங்காட்டு மான் பிஷ்ணாய் சமூகத்திற்கு மிகவும் புனிதமானது. லாரன்ஸ், சல்மான் ராஜஸ்தானுக்குச் சென்று 'கருங்காட்டு மானைக் கொன்றதற்காக' மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார், இல்லையெனில் அவர் கொல்லப்படுவார் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இதில் குறிப்பிடும் விஷயம் என்னவென்றால் சல்மான் கான் மீதான வேட்டை வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சல்மான் கானின் படங்கள்
சல்மான் சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'சிகந்தர்' படத்தில் நடித்தார். இந்தப் படம் ஈத் பண்டிகையின் போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, ஆனால் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை. சிகந்தர் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல், இந்தியாவில் 109 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. சமீபத்தில் படத்தின் வசூல் குறைந்து வருகிறது. இதனால் 250 கோடி ரூபாய் வசூலைக் கூட எட்டாமல் படம் தோல்வியடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்