இது தான் என்னோட பெஸ்ட்.. கேஜிஎஃப் டைரக்டர் கொடுத்த ஹிண்ட்.. திருவிழாவிற்கு தயாராகும் ரசிகர்கள்..
பிரபாஸின் சலார் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையிலேயே நான் எழுதிய சிறந்த கதையாக இருக்கும் என இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.
பான் இந்தியா ரெபெல் ஸ்டாரான பிரபாஸ் பாகுபலி 2 படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்தார். இதையடுத்து, கே.ஜி.எஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் இணைந்து சலார் 1 படத்தில் நடித்தார். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இது பிரபாஸை மீண்டும் வெற்றி நாயகனாக மாற்றியது.
எனக்கு ஏமாற்றம் தான்
இந்நிலையில், சலார் படம் வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், கைராம் வாஷிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது படங்கள் குறித்த பல தகவல்களை அவர் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், "சாலார் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக இருந்தாலும் அது எனக்கு ஏமாற்றத்தை தான் அளித்தது. அந்தப் படத்தில் நிறைய கடின உழைப்பை வழங்கி இருந்ததால், இன்னும் அதிகமான வரவேற்பை பெற்றிருக்கலாம். அதனால், சலார் முதல் பாகத்தால் நான் முழுமையான சந்தோஷத்தை அடைய முடியவில்லை. கே.ஜி.எஃப் 2 கொடுத்த வெற்றியால் இந்தப் படத்தை சரியாக எடுக்காமல் விட்டுவிட்டேனோ என்ற சந்தேகம் அடிக்கடி என்னுள் எழுகிறது.
இது தான் பெஸ்ட்
இதனால் சலார் 2 படத்தை எனது சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ளேன். படத்தில் நான் எழுதிய கதைகளும் வசனங்கலும் அனேகமாக எனது சிறந்த படைப்பில் ஒன்றாக இருக்கும். நான் கற்பனை செய்வதை விடவும், பார்வையாளர்கள் கற்பனை செய்வதை விடவும் நான் அதை பெரிதாக உருவாக்கப் போகிறேன். இது சந்தேகத்திற்கு இடமின்றி எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறினார்.
ட்ரெண்டிங்கில் சலார்
இந்நிலையில், சலார் திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்ததை பிரபாஸ் ரசிகர்கள் பண்டிகையாக நினைத்து கொண்டாடி வருகின்றனர், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் படத்தை பற்றிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் படம் குறித்த அவர்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் சலார் இன்று எக்ஸ் (ட்விட்டர்) இல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மீண்டு வந்த பிரபாஸ்
பான் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமான பாகுபலி 2க்குப் பிறகு, பிரபாஸ் சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்களில் தொடர் தோல்வியை சந்தித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதனால் பிரபாஸின் சினிமா பாகுபலியோடு முடிந்துவிட்டது என பலரும் விமர்சனம் செய்தனர்.
குவிந்த வசூல்
இந்நிலையில் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் நிரூபித்துக் காட்டிய படமாக வந்தது சலார். இதன் வசூல் அமோகமாக இருந்தது. தனது ஹை வோல்டேஜ் ஆக்ஷன் மூலம் பிரபாஸ் பட்டையை கிளப்பினார். இதனால், தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் சலார் தனது ஆதிக்கத்தை செலுத்தி உலகளவில் சுமார் 700 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.
இந்தப் படத்தில் பிரபாஸுடன், பிருத்விராஜ் சுகுமாரன் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
டாபிக்ஸ்