அம்மா அன்னபூர்ணா தேவி.. சாமந்தி பூ மாலை.. நெற்றியில் திலகம்.. சமத்தாக நின்ற சாய்பல்லவி! - முழு விபரம்!
ராமாயணத்தின் தழுவலான நிதேஷ் திவாரியின் படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். மேலும் ரன்பீர் கபூர் ராமனாகவும், யஷ் ராவணனாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
![அம்மா அன்னபூர்ணா தேவி.. சாமந்தி பூ மாலை.. நெற்றியில் திலகம்.. சமத்தாக நின்ற சாய்பல்லவி! - முழு விபரம்! அம்மா அன்னபூர்ணா தேவி.. சாமந்தி பூ மாலை.. நெற்றியில் திலகம்.. சமத்தாக நின்ற சாய்பல்லவி! - முழு விபரம்!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/23/550x309/sai_pallavi_1734936721000_1734950121208.jpg)
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தில் நடிகை சாய்பல்லவி சீதாவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். உடலளவில் மட்டுமல்லாது, ஆன்மீக ரீதியாகவும் அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்தி வரும் சாய்பல்லவி, அண்மையில் வாரணாசியில் உள்ள அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் சென்று அங்கிருக்கும் தெய்வத்தின் ஆசீர்வாதம் பெற்று இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நீல நிற சல்வார் மற்றும் அதற்கு மேட்சிங்காக துப்பாட்டாவை அணிந்து வந்திருந்த சாய்பல்லவி, சாமந்திப் பூ மாலையை அணிந்து கொண்டு, நெற்றியில் திலகமிட்டு மனமுருக கடவுகளை வணங்கினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சீதையாக நடிக்கும் சாய்பல்லவி ராமாயணம் படத்திற்காக சைவத்திற்கு மாறியிருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது கூட, பிரத்யேக சமையல் காரரை அழைத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனை மறுத்த சாய்பல்லவி அதற்கு எதிர்வினையாற்றினார்.
அதில் அவர் ‘பெரும்பாலான நேரங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும், ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைக் காணும்போது, நான் அமைதியாக இருக்கவே தேர்வு செய்கிறேன். இது போன்ற வதந்திகள் எனது படங்களின் வெளியீடுகள், அறிவிப்புகள் அல்லது எனது வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்களின் போது நடக்கிறது.
ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது. ’ என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் அடுத்தமுறை என்னைப்பற்றி இது போன்ற தகவல்கள் வெளியாகும் போது, சட்ட ரீதியாக முறையான நடவடிக்கை எடுப்பேன்’ என்றும் சாடியிருந்தார்.
சாய்பல்லவி பேட்டி
முன்னதாக, ராணா, சாய் பல்லவி நடித்த ‘விராத பர்வம்’ படம் தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், “ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் தீவிரவாதிகளால், இந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டி இருப்பார்கள். அது பயங்கரவாதம் என்றால், கொரோனா காலத்தில் பசுவை இழுத்துச் சென்ற இஸ்லாமியர் மீது கொடூர தாக்குதல் நடத்தி ‘ ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியது மட்டும் சரியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம். இங்கு அனைவரும் சமமானவர்கள். ஆகையால், சாதி, மதத்தால் மக்களை பிரிப்பது தவறானது” என்று பேசினார்.
அதே போல, பாகிஸ்தானில் இருப்பவர்கள் நமது இந்திய ராணுவத்தை தீவிரவாதிகள் போல பாவிக்கிறார்கள். ஆனால், நமக்கு அவர்கள்தான் அப்படி. ஆகையால், கண்ணோட்டம் மாறுகிறது. எனக்கு வன்முறை புரியவில்லை என்று பேசி இருந்தார். இது அந்த சமயத்தில் சர்ச்சையை உருவாக்கியது. பல்வேறு தரப்பினர் சாய்பல்லவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இதனையடுத்து அதற்கு விளக்கம் அளித்த சாய்பல்லவி தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் எல்லா மனிதர்களும் இங்கு ஒன்றுதான். அவர்களை சாதி, மதம், இனத்தால் பிரிப்பது சரியானது அல்ல என்பதைத்தான் நான் அந்த நேர்காணலில் கூறியிருந்தேன்” என்றார்.
இந்த நிலையில் அண்மையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் அமரன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, சாய் பல்லவியின் இந்த பழைய நேர்காணலை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல மறுக்கும் சாய்பல்லவி ராமாயாணா படத்தில் ஏன் சீதாதேவியாக நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, அமரன் படத்தையும், அவரையும் தடை செய்ய வேண்டும் என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனர்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்