தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Safety Of Fans Is Priority For Concert Says Music Director Santhosh Narayanan

Santhosh Narayanan: மீண்டும் திறந்த வெளியில் இசை கச்சேரி.. ரிஸ்க் எடுக்கும் சநா! - கொடுத்த உறுதி என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 09, 2024 04:44 PM IST

இந்த ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ ஏ ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம்.

சந்தோஷ் நாராயணன் பேட்டி!
சந்தோஷ் நாராயணன் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.  

உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன், முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “ உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால், திறந்தவெளியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு விருப்பமான இசையை ரசிக்கமுடியும். 

இசை கலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்கமுடியும். இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்கு நன்றாக உட்கட்டமைப்புடன் கூடிய திறந்த வெளி அரங்கம் தேவை. அத்தகைய அரங்கமாக சென்னையில் அமையப்பெற்றிருப்பது தான் நேரு ஸ்டேடியம்.

இந்த ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ ஏ ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். 

முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

சென்னையில் நடைபெறும் இசைநிகழ்ச்சியின் நோக்கம் லாபம் மட்டுமல்ல. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட்.

இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, ஏ. ஆர். ரஹ்மான், ஜீ வி பிரகாஷ் குமார், அனிரூத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும்.

நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறு எதிர்பாராத அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தினை முன்மாதிரியாக வைத்து தான் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘நீயே ஒளி’ என இசை நிகழ்ச்சிக்கு பெயரிட்டு, பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள்.. மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். இந்த டிக்கெட்டை காண்பித்தால் அதிலுள்ள க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். 

இந்த சலுகையை ஊக்கப்படுத்தும் வகையில் நான் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இசைகலைஞர்கள் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயிலில் பயணித்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகைத்தந்து, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தரவிருக்கிறோம். 

அதேபோல் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மெட்ரோ ரயிலில் பயணித்து வீடு திரும்ப போகிறேன். அந்நாளில் மெட்ரோ ரயில் இரவு பன்னிரண்டு மணி வரை இயங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் முழுக்க வெளிப்படையான அணுகுமுறையைத் தான் பின்பற்றவிருக்கிறோம். அதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்று பேசினார். 

முன்னதாக, சென்னை கடற்கரை சாலை அருகே திறந்த வெளியில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் முன்னேற்பாடு வசதிகள் சரியாக செய்யப்படவில்லை. இதனால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். அது போல இங்கே தவறுகள் நடக்காது  என்பதை சொல்லும் விதமாகவே சந்தோஷ் நாராயணன் பேசி இருக்கிறார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.