Kamala Kamesh: பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் மறைந்ததாக பரவிய வதந்தி.. அம்மா நலமுடன் உள்ளார் - உமா ரியாஸ் விளக்கம்
தமிழ் சினிமாவில் அம்மா, குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகையான கமலா காமேஷ் உடல்நலக்குறைவால் காலமானாதாக வதந்தி பரவியது. இதையடுத்து தனது தாயார் நலமுடன் இருப்பதாக கமலா காமேஷ் மகளும், நடிகையுமான உமா ரியாஸ் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் விசு படங்களில் அம்மா கதாபாத்திரங்களின் தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை கமலா காமேஷ். இவர் உடல்நலகுறைவால் அவதிப்பட்டு காலமானதாக தகவல்கள் உலா வந்தன.
இவரது ஒரே மகளான உமா ரியாஸ்கான் தமிழ் சினிமாவில் நடிகையாகவும், டிவி பிரபலமாகவும் இருந்து வருகிறார்.
அம்மா நலமுடன் இருக்கிறார்
தமிழ் சினிமாவில் 1980 காலகட்டத்தில் இருந்து அம்மா, குடும்ப தலைவி உள்பட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கமலா காமேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானாதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தனது தாயார் நலமுடன் இருப்பதாக கமலா காமேஷ் மகளும், நடிகையுமான உமா ரியாஸ்கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “எனது அம்மா நலமுடன் இருக்கிறார். 72 வயதாகும் எனது மாமியார் ரஷிதா பானு தான் இறந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
எதார்த்த நடிகை கமலா காமேஷ்
இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்ட கமலா காமேஷ், அவரது பள்ளிக் கால நண்பரும், சினிமா இயக்குநருமான ஜெயபாரதி, தனது படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப் பாங்கான பெண்ணைத் தீவிரமாக தேடிடிக் கொண்டிருந்தார். அப்படி சினிமா பின்னணியே இல்லாத கமலா காமேஷ் தனது குடிசை படத்தில் நடிக்க வைத்தார். விதியின் விளையாட்டால் தான் நடிகையானேன் என சினிமாவில் நடிக்க வந்தது பற்றி கமலா காமேஷ் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
1980 காலகட்டத்தில் குடும்பத் தலைவி, அம்மா, குணசத்திர கதாபாத்திரங்கள் கொடி கட்டி பறந்தார் கமலா காமேஷ். மறைந்த இயக்குநர் விசுவின் பெரும்பாலான படங்களில் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தார். தமிழில் கல்ட் கிளாசிக்ககாவும், சிறந்த குடும்ப திரைப்படமாகவும் இருந்து வரும் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென இடம் பிடித்தார். கமலா காமேஷ் என்று சொன்னாலே இவரது இந்த கோதாவரி கதாபாத்திரம் தான் நினைவுக்கு வரும் விதமாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
கணவர் திடீரென இறந்துவிட்ட நிலையில், சிங்கிள் மதராக தனது மகள் உமாவை வளர்த்த இவர், தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சினிமாவுக்கு பிரேக்
1996 காலகட்டத்தில் சினிமா ஷுட்டிங்கின்போது இடுப்பில் காயமடைந்த நிலையில் ஏழு ஆபரேஷன்கள் செய்து கொண்டார் கமலா காமேஷ். இடுப்பு வலியும் பொருப்படுத்தாமல் நடிப்பை தொடர்ந்த நிலையில், 2003க்கு பிறகு நடிப்புக்கு பிரேக் கொடுத்தார். கடைசியாக தமிழில் என் உயிரிணும் மேலான என்ற படத்தில் நடித்தார். இதன் பின்னர் சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விஷேசங்கள் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
சினிமாவில் விருப்பம் இல்லாமல் நடிக்க வந்ததாக கூறிய கமலா காமேஷ் 500க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கமலா காமேஷ் குடும்பம்
மயிலாடுதுறை அருகே வானதிராஜபுரத்தில் பிறந்த கமலா காமேஷ் 1974இல் இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உமா என்ற ஒரேயொரு பெண் குழந்தை பிறந்தது. திடீர் உடல் நலக்குறைவால் 1984இல் காமேஷ் உயிரிழந்த நிலையில், நடிகையாகவும், சிங்கிள் மதராகவும் தனது மகள் உமாவை வளர்த்துள்ளார்.
கமலா காமேஷ் மகள் உமா, சினிமாவில் நடிகையாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசனின் அன்பே சிவம், தூங்காவனம், அருள்நிதி நடித்த மெளன குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரியாஸ்கானை மணந்த உமாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்.