Vijayakanth: புயலாய் மாறிய புலன் விசாரணை.. ‘விஜயகாந்திற்காக 50 லட்சத்தை தூக்கி எறிந்தேன்’ - செல்வமணி பேட்டி
Vijayakanth: ‘எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் இடையே மன வருத்தம் இருந்தது. அப்போது அங்கிருந்த மேனேஜர்கள் என்னை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால், தியேட்டரில் இடமில்லை என்று கூறி விட்டார்கள்.’ - விஜயகாந்த்

Vijayakanth: ‘புலன் விசாரணை’ திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் ஆ.கே. செல்வமணி அந்தப்படத்தின் அனுபவங்கள் குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
ரஜினி திரைப்படம்
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது ‘ புலன் விசாரணை திரைப்படத்துடன், ரஜினி சாரின் படமும் ரிலீஸ் ஆனது. ஆனால், அப்போது எனக்கு அது குறித்தான எந்த பயமும் இல்லை. அது பொங்கல் பண்டிகை வேறு; பொங்கல் அன்று முன்பெல்லாம் 10 படங்கள் கூட ரிலீஸ் ஆகும். அதனால், ரஜினி சாருக்கு 60 தியேட்டர்கள் கொடுக்கிறார்கள் என்றால், எங்களுக்கு ஒரு 50 தியேட்டர்கள் கிடைக்கும். அந்த சமயத்தில் சிறுபட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யலாம், பெரிய பட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யலாம். சூழ்நிலை நன்றாக இருந்தது.
ராவுத்தர் கொடுத்த எச்சரிக்கை
இதற்கிடையே பட ரிலீஸிற்கு முன்னதாக, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் என்னை அழைத்து செல்வமணி இந்தப் படம் ஓடவிட்டால், நான் இந்த அலுவலகத்தில் இருக்க மாட்டேன்; நீ இந்த ரோட்டிற்கு கூட வரக்கூடாது என்று கூறிவிட்டார். எனக்கு அது கொஞ்சம் உறுத்தலாகப்பட்டது.
நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்து இருக்கிறோம். இவர்கள் என்ன இப்படி பேசுகிறார்கள் என்று தோன்றியது. நான் என்னுடைய அம்மா, அப்பா, தங்கை ஆகியோரை படத்தின் சிறப்பு காட்சிக்காக அழைத்து சென்று இருந்தேன். அது சமயத்தில் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் இடையே மன வருத்தம் இருந்தது.
மன வருத்தத்தில் ஊருக்குச் செல்லவில்லை
அப்போது அங்கிருந்த மேனேஜர்கள் என்னை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால், தியேட்டரில் இடமில்லை என்று கூறி விட்டார்கள். எனக்கு நான் குடும்பத்தை வேறு அழைத்து வந்து விட்டேனே என்று கஷ்டமாக போய்விட்டது. படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் தான் நான் படம் பார்க்க சென்றேன்.
பொங்கலுக்கு நான் ஊருக்கு செல்லவில்லை; வீட்டில் கேட்டால் ரிலீஸ் வேலைகள் இருக்கிறது என்று கூறிவிட்டேன். விஜயகாந்த் தரப்பிடம் பொங்கலுக்கு ஊருக்கு சென்று விட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் அப்படி சொன்னதற்கான காரணம் எனக்கு அங்கு போதிய வரவேற்பு இல்லை.
புலன் விசாரணை கிளப்பிய புயல்
புலன் விசாரணை படத்தின் சில இடங்களின் விநியோக உரிமையை ஜிவி சார் பெற்றிருந்தார். அவருக்கு கோர்டினேட்டராக சேதுராமன் சார் இருந்தார். இந்த நிலையில் சேது சார், ஜிவி சாரை பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார்.
ஜிவி சார் என்னிடம் படம் செய்யலாமா? என்று கேட்டார். நான் செய்யலாம் சார் என்று கூறியவுடன், சம்பளம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். நான் 50,000 வேண்டும் என்பதை குறிப்பிடும் விதமாக 50 என்றேன். அவர் 25 ஆக வைத்துக் கொள்ளலாம் என்று கூறி ஒரு செக்கை கொடுத்தார்.
25 லட்சம் வேண்டாம்
அதன் பின்னர் வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டு அங்கு சென்றேன். அங்கிருந்து செக்கை பார்த்த போது, அதில் 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது.
அப்படியானால் அவர் எனக்கு சம்பளமாக 25 லட்சம் கொடுக்கப்போகிறார் என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு கை கால் ஓடவே இல்லை. அவ்வளவு சந்தோஷமாக இருந்தது; குழந்தைகளிடம் கூறினேன்; இரவு நன்றாக குடித்து சந்தோஷமாக இருந்தேன்.
ஆனால், காலையிலே ராவுத்தர் என்னைப் பார்க்க வந்தார். படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி இருக்கிறது. அடுத்தப்படமும் நம் அண்ணனுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார். நான் உடனே ஜீவி சாரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டேனே என்று கூறினேன். ராவுத்தர் அவர் கிடக்கிறார். நாம் படம் செய்யலாம் என்று சொன்னார். இதையடுத்து ஜீவி சாரிடம் சென்று, நாம் அடுத்தப்படத்தில் வேலை செய்யலாமா? சார் என்று கேட்டேன்.
ஆனால் அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து நான் செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டு விஜயகாந்த் சாருடன் மீண்டும் இணைந்தேன். அந்த திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். அந்தப்படத்திற்காக சம்பளமாக எனக்கு 50,000 கொடுக்கப்பட்டது. விஜயகாந்த் சாருக்காக நான் அதனைச் செய்தேன்.' என்று அவர் அதில் (கலாட்டா யூடியூப் சேனல்) பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்