Virumaandi: ‘விருமாண்டியில் வடிவேலை தூக்கியது ஏன்?’ ராசி அழகப்பன் ‘நச்’ பேட்டி!
Rasi Azhagappan Interview: கமல் சார் சொன்னாரு, ‘ராசி, நான் ஒரு கதை வெச்சிருக்கேன். கிராமத்து கதை. நீங்க தான் இருந்து பண்ணி தரனும்’ என்றார். நானும் சரி என்றேன், அது தான் சண்டியர் கதை.
இயக்குனராக, கதையாசிரியராக, கதை ஆய்வாளராக பணியாற்றிய ராசி அழகப்பன், கமல் உடனும் அவரது ராஜ்கமல் மூவிஸிலும் நிறைய படங்களில் பணியாற்றியவர். டூரிங் டாக்கிஸ் இணையத்தில் முன்பு அவர் அளித்த முக்கியமான பேட்டி இதோ:
‘‘தேவர் மகன் படம் சமயத்தில் அந்த திரைக்கதை பிரமாதமாக இருக்கிறது என்று அப்போது மேடையில் கலைஞர் கருணாநிதி கமலை பாராட்டினார். அதே மேடையில், கமல் சார் பெருந்தன்மையோடு மேடையில், ‘இந்த பேருக்கும் புகழுக்கும் நான் தான் காரணம் என கலைஞர் கூறுகிறார், அதில் பாதி புகழ் ராசி அழகப்பனுக்கும் சேரும், அவருக்கு நான் படம் கொடுப்பேன்’ என்று கமல் பேசினார். அது நாளிதழ்களிலும் வந்தது.
நான் கமல் சாரிடம் போனேன், ‘நான் ஒரு கதை சொல்றேன், நீங்க நடிக்க வேண்டாம், உங்க பேனரில் பண்ணுங்க, ஒரு கோடியில் முடித்து விடலாம்’ என்று கூறினேன். நானும் நான்கு ஐந்து நாள் போய் ஐந்தாறு சீன் சொன்னேன். அதை கேட்டு, கேட்டு, ‘நானும் இந்த மாதிரி ஒரு சீன் தான் வெச்சிருக்கேன்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ‘சரி , கமல் சார் நமக்கு படம் தரப்போறதில்லை’ என தெரிந்து நிறுத்திவிட்டேன்.
அப்போ கமல் சார் சொன்னாரு, ‘ராசி, நான் ஒரு கதை வெச்சிருக்கேன். கிராமத்து கதை. நீங்க தான் இருந்து பண்ணி தரனும்’ என்றார். நானும் சரி என்றேன், அது தான் சண்டியர் கதை. நாசர் சாரை வில்லனா போடுறார், அவரும் ஆபிஸ் வருகிறார். நான் சொன்னேன், ‘நாசர் இதற்கு ஒத்து வரமாட்டார்’ என்று.
‘ஏன்… ராசி என் பொழப்புல மண்ணை அள்ளி போடுறீங்க’ என்று நேருக்கு நேர் கேட்கிறார் நாசர். கமல் சாரிடம் நான் சொன்னேன், ‘சார், ரசிகருக்கு என்ன தீனி போடப்போறீங்க? ஏற்கனவே தேவர் மகன் பண்ணியாச்சு. குருதிபுனலிலும் நடிச்சு ஹிட் ஆக்கி வெச்சிருக்கீங்க. திரும்பவும், உங்க ரெண்டு பேரு படத்தையும் போஸ்டரில் போடப் போறீங்களா? இது நியாமே இல்லை சார், புது ஆளை போடுங்க’ என்று கூறினேன்.
அதன் பிறகும் வடிவேலு, அது இதுனு ஆளை போட பேசினாங்க. யாரும் வேண்டாம், புது ஆளுங்களை போடுங்க என்றேன். ‘பிசினஸிற்கு வேண்டுமே ’ என்று கேட்டார் கமல். ‘கமலஹாசன் என்கிற வரி தான் பிசினஸ்,’ என்று அவரிடம் கூறினேன். ‘அப்போ நீயே செலக்ட் பண்ணு’ என்று சுதந்திரமா என்னை அனுமதித்தார்.
அப்படி தான் கமல் சார் பின்னாடி நிற்கும் 15 பேரை நானே தேர்வு செய்தேன். அப்படி தான் விருமாண்டிக்கு ஆட்களை தேர்வு செய்தோம். படத்திற்கு நிறைய கள ஆய்வு எல்லாம் முடித்துவிட்டு, கதை, வசனம் எல்லாம் முடித்துவிட்டு, கமல் சாருக்கும் எனக்கும் வார்த்தையில் ஒரு சின்ன மனஸ்தாபம். ஷூட்டிங் கிளம்பும் போது, ‘நான் கிளம்புறேன் சார்’ என்று வந்துவிட்டேன்,’’
என்று அந்த பேட்டியில் ராசி அழகப்பன் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்