தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rana Naidu Review Released By Netflix Starring Rana Daggubati, Venkatesh Daggubati, Suchitra Pillai, Rajni Basumatary

Rana Naidu Review: காதை மூடி பார்க்கவா? கண்ணை மூடி கேட்கவா? ராணா நாயுடு ரிவியூ!

HT Tamil Desk HT Tamil
Mar 14, 2023 08:20 AM IST

ராணா நாயுடு 10 எபிசோடுகளுடன் முடிகிறது. பல்வேறு குழப்பங்கள், கேள்விகளுடன் முடிகிறது. அதை வைத்து, இன்னும் பல சீசன் இருக்கும் என்பது தெரிகிறது.

ராணா நாயுடு போஸ்டர்
ராணா நாயுடு போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

அதே நேரத்தில், சிறையில் இருக்கும் அவரது தந்தை நாகா நாயுடு மீது, கடும் கோபத்தில் இருக்கிறார் ராணா. 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நாகா நாயுடு, நல்ல எண்ண அடிப்படையில் 15 ஆண்டுகளில் விடுதலை ஆகிறார். 

இதை அவரது மகன்களே எதிர்பார்க்கவில்லை. விடுதலையாகி வரும் நாகா, தன் மகன்களுடன் சேர முயற்சிக்கிறார். ஆனால், அதனால் நிறைய பிரச்னைகள் வருகிறது. ஏற்கனவே கோபத்தில் இருக்கும் மகன் ராணா, அப்பா நாகாவை தீர்த்து கட்ட முயற்சிகளை எடுக்கிறான். 

அதில் அவர் கொல்லப்பட்டாரா? ஏன் இவர்களுக்குள் இத்தனை வன்மம்? நாகா நாயுடு சிறை சென்றது ஏன்? மகன்களின் கோபத்தின் பின்னணி என்ன? என்பது தான், சீரிஸின் முழு கதை. ராணா நாயுடுவாக ராணா டகுபதி கச்சிதமாக நடித்திருக்கிறார். அவரது தந்தை நாகா நாயுடாக வெங்கடேஷூம் செதுக்கியிருக்கிறார். 

ஆந்திர குடும்பத்தின் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போலவே அத்தனை கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே தெலுங்கு படங்களில் வசனங்களும், வசைகளும் எல்லை தாண்டும். இந்த சீரிஸில், எல்லைக்கு எல்லையெல்லாம் தாண்டி, கெட்ட வார்த்தைகளின் அருவி கொட்டுகிறது. சில நேரங்களில் காதுகளை பொத்திக் கொண்டு காட்சிகளை காணலாம்.

வஞ்சம், கொலை, ரத்தம் என வழி நெடுக ஈரம் தெரிந்தாலும், கதையில் இருக்கும் கனம் காப்பாற்றுகிறது. ஆனாலும் சில இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு ஆடியோவை கேட்கலாம். பாலியல் காட்சிகளையும் பஞ்சம் இல்லாமல் தந்திருப்பதால், குடும்பத்தோடு சில நேரம் முகம் சுழிப்பதை தவிர்க்க முடியவில்லை. 

ராணாவின் மனைவியாக வரும் சுரீன் சாவ்லாவின் நடிப்பும், அவரது தம்பியாக வரும் அபிஷேக் பானர்ஜியின் நடிப்பும் நச் ரகம். தந்தை-மகன்களின் மோதலால் இதை குடும்ப படம் என்பதா? குடும்ப க்ரைம் என்பதா? குடும்ப த்ரில்லர் என்பதா? என்கிற குழப்பம் வராமல் இல்லை.

ஆனால், வயது வரம்பு கொண்டவர்கள் பார்த்தால் படம் ரசிக்கும் படமாகவே இருக்கும். வெள்ளத்திரையில் வந்த ராணாவும், வெங்கடேஷூம் சின்னத்திரையில் சில மணி நேரங்கள் நம்மை கட்டிப்போடுகிறார்கள். அந்த அளவிற்கு எபிசோடு எபிசோடாக பரபரப்புடன் தான் நகர்கிறது ராணா நாயுடு. 

ரே டோனாவன் வெப் சீரிஸ், கிட்டத்தட்ட 7 சீசன்களை கொண்டது. எபிசோடுகள் மட்டும் 83 இருக்கும். ராணா நாயுடு 10 எபிசோடுகளுடன் முடிகிறது. பல்வேறு குழப்பங்கள், கேள்விகளுடன் முடிகிறது. அதை வைத்து பார்க்கும் போது இன்னும் பல சீசன் இருக்கும் என்பது தெரிகிறது. 

கர்மன்யா ஆஜா,பி.வி.எஸ்.,ரவி உள்ளிட்ட 5 பேர் இந்த கதையை எழுதியிருக்கிறார்கள். சுபன் வெர்மா, கரன் அன்ஸ்மன் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். சங்கீத்-சித்தார்த் இசையில், குறிப்பாக பின்னணியில் ரத்தம் தெறிக்கிறது. ஜெயகிருஷ்ண கும்மாடியின் ஒளிப்பதிவில் குரோதம் கொப்பளிக்கிறது. 

சுத்தமான தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு, நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ராணா நாயுடு, சஸ்பென்ஸ் த்ரில்லர் தான். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்? இது , குடும்பங்கள் கொலை செய்யும் வெற்றி!

IPL_Entry_Point

டாபிக்ஸ்