44 Years of Kaali: ரஜினியும் அவரது மனைவி லதாவும் சேர்ந்து பார்த்த முதல் படம் ‘காளி’..44 ஆண்டுகள் நிறைவு!
44 Years of Kaali: காளி பாக்ஸ் ஆபிஸ் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் இந்த படத்துக்கும் ரஜினிக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருந்தது. ரஜினியும், லதாவுக்கும் இடையே காதல் மலர்ந்த போது இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்த்த படம் 'காளி'.

தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள், தத்ரூபமான சண்டை காட்சிகள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
உச்ச நட்சத்திரம் ரஜினி
அதேபோல், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனி பாணி இருக்கும். அந்தவகையில் வேகமான நடை, விதவிதமான உடல் பாவனை, வித்தியாசமான வசன உச்சரிப்பு, வியக்க வைக்கும் நடிப்பு, விறுவிறுப்பான சண்டை என ரஜினிகாந்தின் ஸ்டைல் வித்தியாசமானது. இந்த மாறுபட்ட ஸ்டைல் மூலம் இன்றைக்கும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
எட்டும் எட்டுவிதம்
ரஜினியின் திரை வாழ்க்கையில் 1980 மிக முக்கியமான வருடம். அந்த ஆண்டு கிட்டதட்ட 8 படங்களில் நடித்திருந்தார் ரஜினி. 'அன்புக்கு நான் அடிமை', 'எல்லாம் உன் கைராசி', 'முரட்டுக்காளை', 'பில்லா', 'பொல்லாதவன்', 'ஜானி' என எட்டு படங்கள் ரிலீஸாகின. எட்டும் எட்டுவித கொண்டாட்டங்கள். ரஜினிக்கு சம்பளமும் மார்க்கெட் வேல்யூவும் முக்கியமாக ரசிகர் பட்டாளமும் கூடிக்கொண்டே போனதெல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான்.
அனுராதா ஸ்ரீராம் அறிமுகம்
அந்தவகையில் 1980 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி வெளியான 'காளி' திரைப்படம் ரஜினிகாந்துக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஐ.வி.சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா, விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, சுருளிராஜன், குமரிமுத்து மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தான் அனுராதா ஸ்ரீராம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.
'காளி'
'காளி' தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. தெலுங்கில் விஜயகுமாருக்கு பதிலாக சிரஞ்சீவி நடித்திருந்தார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் பழைய கதையான பழிவாங்கும் படலமாக இந்தப் படத்தின் கதை அமைந்திருந்தாலும் படத்தின் பிளஸ் பாயிண்ட் விறுவிறுப்பு. முதுகில் 'காளி' என்று கத்தியினால் கையெழுத்திட்டு அனுப்புவது, இருபது, முப்பது மோட்டார் சைக்கிள்கள் ரஜினியைத் துரத்த, லெவல் கிராஸிங்கில் குறுக்கே ஓடும் ரயிலின் மேலாக ரஜினி 'பைக்'கில் தாவுவது போன்ற சில சாகசங்களையும் இப்படத்தில் புகுத்தி இருப்பார்கள்.
லதாவுடன் படம் பார்த்த ரஜினி
ரஜினியின் ஸ்டைல் நிச்சயமாகப் படத்துக்குக் கவர்ச்சிதான். ஆனால், அதற்காக சூலத்தில் கையை வெட்டித் திலகம் இட்டுக் கொள்வதும், விரலை அறுத்து சீமாவின் நெற்றியில் திலகம் இடுவதும் போன்ற காட்சிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன. காளி பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய வெற்றி அடையாவிட்டாலும் ரஜினிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. முக்கியமாக இந்த படத்துக்கும் ரஜினிக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருந்தது. ரஜினியும், லதாவுக்கும் இடையே காதல் மலர்ந்த போது இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்த்த படம் 'காளி'.
44 ஆம் ஆண்டில் 'காளி'
ஆக்ஷன் காட்சிகளில் அசத்திய ரஜினியின் 'காளி' 1980 ஆம் ஆண்டு இதே ஜூலை 3-ல் திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படம் வெளிவந்து இன்றோடு 44 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்