தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  46 Years Of Bairavi: சோலோ ஹீரோவாக ரஜினிக்கு திருப்புமுனை!சூப்பர் ஸ்டார் பட்டமும்,பாம்பு சென்டிமென்டும் ஒட்டி கொண்ட படம்

46 Years of Bairavi: சோலோ ஹீரோவாக ரஜினிக்கு திருப்புமுனை!சூப்பர் ஸ்டார் பட்டமும்,பாம்பு சென்டிமென்டும் ஒட்டி கொண்ட படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 08, 2024 07:00 AM IST

வில்லனாக இருந்த ரஜினிகாந்த் சோலோ ஹீரோவாக நடித்து அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படமாக பைரவி இருந்தது. இந்த படத்தில் இருந்து தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், பாம்பு சென்டிமென்டும் ரஜினியுடன் ஒட்டிக்கொண்டது.

சோலோ ஹீரோவாக ரஜினிக்கு திருப்புமுனை, பாம்பு சென்டிமென்ட் ஒட்டி கொண்ட படம்
சோலோ ஹீரோவாக ரஜினிக்கு திருப்புமுனை, பாம்பு சென்டிமென்ட் ஒட்டி கொண்ட படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் பைரவி படத்தில் வித்தியாசமாக ஹீரோவாக நடித்து வந்த ஸ்ரீகாந்தை வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாகவும் இந்த படத்தில் நடிக்க வைத்தார்கள். அது நன்கு ஒர்அவுட்டும் ஆனது. இயக்குநர் சி.வி. ஸ்ரீதர் உதவியாளரான எம். பாஸ்கர் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதை

ரஜினியை ஹீரோவாக ரசிகர்கள் மனதில் சென்றடைய வைத்த பைரவி படத்தை அண்ணன் - தங்கை சென்டிமென்டை பிரதானமாக வைத்து திரைக்கதை ஆசிரியர் கலைஞானம் உருவாக்கியிருந்தார்.

விபத்து ஒன்றில் சிறு வயதிலேயே ரஜினியும், அவரது தங்கையாக வரும் கீதாவும் பிரிந்துவிடுகிறார்கள். வளர்ந்த பின்பு இருவருக்கும் தாங்கள் அண்ணன், தங்கை என்று தெரியாமல் மோதல் ஏற்படுகிறது. எதிர்பாராத திருப்பத்தால் இருவரும் அண்ணன், தங்கை என தெரியவருகிறது.

அப்போது, தான் செய்திருந்த தவறின் விளைவால் வீண் பழி சுமத்தப்பட்டு ரஜினி ஜெயிலுக்கு செல்ல நேரிட, கீதா கொல்லப்படுகிறாள். பின்னர் ஜெயிலில் இருந்து தப்பித்து வரும் ரஜினி தனது தங்கையை கொன்றவனை பழி வாங்குகிறார். இதுவே பைரவி படத்தின் கதை.

படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். காமெடிக்கு சுருளி ராஜன், மனோரமா, விகே ராமசாமி, சுதிர் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

வழக்கமான பழிக்கு பழி கதையாக இருந்தாலும் தங்கை சென்டிமென்ட், ஸ்ரீகாந்த் வில்லத்தனம் போன்றவற்றுடன் விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படம் தான் நடிகை கீதாவுக்கு அறிமுக படமாக இருந்தது. அதேபோல் ஸ்ரீகாந்துக்கு பைரவி படத்துக்கு பின் அடுத்தடுத்து பல படங்களில் வில்லன் வாய்ப்புகளும் குவிந்தன.

இளையராஜா இசை

படத்தில் கண்ணதாசன், சிதம்பரநாதன் பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைத்திருந்தார். நண்டூறுது, ஒரு பாதையில் போன்ற பாடல்கள் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாகின. பிளாக் அண்ட் ஒயிட் படமான இதில் பின்னணி இசையும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

படத்தின் கட்அவுட்டில் சூப்பர் ஸ்டார் டைட்டில்

இந்த படம் ரஜினி சோலோ ஹீரோவாக நடித்த முதல் படமாக இருந்தாலும், படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்கதரான கலைப்புலி தாணு, ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து போஸ்டர், கட்அவுட்களில் விளம்பரம் செய்தார்.

அந்த வகையில் பார்த்தால் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனது இந்த படத்தில் தான். ரஜினியை முதல் முறையாக ஹீரோவாக வைத்து எடுப்பதால் ஆரம்பத்தில் இந்த படத்தை தயாரிக்க மறுத்திருந்தார் பிரபல தயாரிப்பாளரான சின்னப்பா தேவர். ஆனால் விடாப்பிடியாக இந்த படத்தை தானே சொந்தமாக தயாரித்த திரைக்கதை ஆசிரியரான கலைஞானம் அதில் வெற்றியும் கண்டார். தமிழ் சினிமாவுக்கு ரஜினிகாந்த் என்ற ஹீரோவின் பாய்ச்சலும் தொடங்கியது.

இந்த படத்துக்காக பாம்பை ரஜினிகாந்த் கையில் வைத்திருக்கும் கட்அவுட் நிறுவி புரொமோட் செய்யப்பட்டது. இந்த படம் அடித்த ஹிட்டால் பாம்பு சென்டிமென்ட் ரஜினியுடன் ஒட்டிக்கொண்டது. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படமாக இருந்த பைரவி வெளியாகி இன்றுடன் 46 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்