தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  34 Years Of Athisaya Piravi: ரஜினியின் பேண்டஸி படம்! சொதப்பலான ரீமேக் - ரசிகர்கள் வெளிப்படுத்திய ஓபன் கமெண்ட்

34 Years of Athisaya Piravi: ரஜினியின் பேண்டஸி படம்! சொதப்பலான ரீமேக் - ரசிகர்கள் வெளிப்படுத்திய ஓபன் கமெண்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2024 07:30 AM IST

ரஜினியின் நடிப்பில் பேண்டஸி படமாக் வெளியான அதிசயபிறவி படத்தை அவரது ஆஸ்தான இயக்குநர் எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். எதிர்பார்த்த வெற்றியை பெறாத இந்த படம் சொதப்பலான ரீமேக் ஆக அமைந்தது. ரசிகர்கள் வெளிப்படுத்திய ஓபன் கமெண்ட் படம் வரவேற்பு பெறாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது.

ரஜினியின் பேண்டஸி படம், சொதப்பலான ரீமேக் படமான அதிசயபிறவி
ரஜினியின் பேண்டஸி படம், சொதப்பலான ரீமேக் படமான அதிசயபிறவி

தமிழ் சினிமாவில் வெற்றி காம்போவாக வலம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கூட்டணியின் மற்றொரு படம் அதிசயபிறவி. ஆனால் இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்பதுதான் எதிர்பாராத டுவிஸ்டாக அமைந்தது.

சிரஞ்சீவி பட ரீமேக்

தெலுங்கில் சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான யமுடிகி மோகுடு படத்தின் தமிழ் ரீமேக் தான் அதிசயபிறவி. தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கனகா, ஷீபா ஆகாஷ்தீப் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

நாகேஷ், ஜெய் கணேஷ், செந்தாமரை, வினுசக்கரவர்த்தி, சோ, விகே ராமசாமி, சின்னி ஜெயந்த், கிங் காங் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

அடாவடி ரவுடி, அப்பாவி என இரண்டு விதமான கேரக்டரில் ரஜினிகாந்த் தோன்றி நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்.

ட்ரெண்டிங் செய்திகள்

பேண்டஸி படம்

ரஜினிகாந்த் நடிப்பில் பேண்டஸியுடன் கூடிய காதல், காமெடி படமாக அதிசயபிறவி படத்தை உருவாக்கியிருப்பார்கள். தமிழுக்கு ஏற்றவாறும், ரஜினிக்கு பொருந்தும் விதமாகமாகவும் தெலுங்கில் இருந்து சில மாற்றங்களுடன் திரைக்கதை அமைத்திருப்பார் பஞ்சு அருணாச்சலம்.

தவறுதலாக கொல்லப்படும் அடாவடி ரஜினி, எமலோகம் சென்று எமனுடன் சண்டையிட்டு மீண்டும் அவரை போல் உருவம் கொண்ட அப்பாவி ரஜினியின் உடலில் உயிர் பெறுவார். அதன் பின்னர் நடக்கும் திருப்பங்களும், கலாட்டாக்களும் தான் படத்தின் கதை.

ரசிகர்களை கவரும் விதமான ஜனரஞ்சக விஷயங்கள் ஏராளமாக இருந்தபோதிலும், படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்த படம் தமிழில் சுமாரான ஓட்டமாக சென்றது.

ரஜினியின் ஸ்டைலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த காட்சிகள், காமெடி போன்றவற்றால் ஓரளவு வரவேற்கப்பட்டது. இதுவும் இல்லாவிட்டால் படம் அட்டர் பிளாப்பாகவே ஆகியிருக்கும்.

யூடியூப்பில் பிரபலமாக வலம் வந்த விடியோவாக ரஜினி டேப் ரெக்கார்டு ஆன் செய்து ஆஃப் செய்வதற்கு ஏற்ப நடிகர் கிங் காங் நடனமாடும் பிரபல காமெடி காட்சி இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது.

காதில் பூ சுத்துகிறார்கள்

இந்த படம் பெரிதாக ரசிகர்களை கவராமல் போனதற்கு படத்தின் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், " எமலோகம், ஆவி மாற்றம் காட்சியை பார்த்தபோது நல்லா காதில் பூ சுத்துறாங்க பலரும் கமெண்ட் அடித்தார்கள். இதில் இருந்தே இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிந்தது" என்றார்.

சொல்லப்போனால் இதன் ஒரிஜினல் பதிப்பான யமுடிகி மோகுடு படம் தமிழில் எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படமான எங்க வீட்டு பிள்ளை படத்தின் சில காட்சிகளையும், கதையும் அடிப்படையாக வைத்து உருவாக்கியிருப்பார்கள்.

பாடல்கள் ஹிட்

வாலி, புலமைபித்தன், பிறைசூடன் பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்தன. அன்னக்கிளியே, சிங்காரி பியாரி, உன்ன பார்த்தே நேரம் போன்ற பாடல்கள் ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்து வருகின்றன. படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக அனைத்து பாடல்களையும் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார்.

வெற்றி கூட்டணியான ரஜினிகாந்த் - எஸ்.பி. முத்துராமன் காம்போவில் வரவேற்பை பெறாத சில படங்களில் ஒன்றாக இருந்தாலும், ரஜினி நடிப்பில் வெளிவந்த பேண்டஸி படங்களில் ஒன்றாக இருந்து வரும் அதிசயபிறவி வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.