Rajinikanth Interview: ‘எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்காது’ - ராமர் கோயில் திறப்பு குறித்து ரஜினி பேட்டி!
ராமர் கோயில் திறந்த உடன் முதலில் பார்த்த 150, 200 பேரில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். என்னை பொறுத்தவரை இது ஆன்மிகம்தான்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடு முழுவதிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று அவர் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும் போது, “ ராமர் கோயில் திறந்த உடன் முதலில் பார்த்த 150, 200 பேரில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். என்னை பொறுத்தவரை இது ஆன்மிகம்தான்” என்றார்.
சமூகவலைதளங்களில் உங்களுக்கு சரிவர இருக்கை ஒதுக்கப்படவில்லை என்பது தொடர்பாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறதே என்ற கேள்வியை முன்வைத்த போது, அதற்கு பதிலளித்த “ரஜினி அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை” என்று கூறினார்.
இது முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வு என்ற பார்வை வைக்கப்படுவது குறித்து கேட்கிறீர்கள்?.. ஒவ்வொருவருடைய பார்வை ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் சொல்லும் கருத்து, அவர்களுடையது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்