Best Tamil Remake: உணர்வுபூர்வ நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த்! ஜீவ நாடியாக அமைந்த இளையராஜா இசை
ஒரிஜினல் இந்தி பதிப்பு , தெலுங்கு ரீமேக் ஆகிய மொழிகளில் இல்லாத வகையில் தமிழ் ரீமேக் படிக்காதவன் படத்தில் மிகவும் உணர்வுபூர்வ நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் ரசிகர்களை கண்கலங்க வைத்திருப்பார்கள். படத்துக்கு ஜீவ நாடியாக இளையராஜா இசை அமைந்தது.
இந்தியில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் குத்-தார். ரவி டன்டன் இயக்கத்தில் வெளியான இந்த படம் அமிதாப் பச்சன் சினிமா கேரியிரில் மெகா ஹிட் படமாக அமைந்தது. 1982இல் வெளியான இந்த படம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் படிக்காதவன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அதேபோல் தெலுங்கில் சோபன் பாபு நடிக்க ட்ரைவர் பாபு என்ற பெயரில் 1986இல் வெளியானது. இந்தியை போல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படம் ஹிட்டானது.
ரஜினியின் சக்சஸ் பார்முலா
ரஜினிகாந்துக்கு சக்சஸ் அமைத்து கொடுத்த பார்முலா படங்களில் ஒன்றாக படிக்காதவன் படம் உள்ளது. அதேபோல் ரஜினிகாந்த் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த இந்த படத்தில் நாகேஷ், அம்பிகா, ரம்யா கிருஷ்ணன், விஜய் பாபு, வடிவுக்கரசி, பூர்னம் விஸ்வநாதன், ஜனகராஜ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
ஜெய்ஷங்கர் வில்லனாகவும், தேங்காய் சீனிவாசன் வில்லத்தனம் செய்பவராகவும் நடித்திருப்பார்கள்.
சுமைதாங்கி ஹீரோ
மற்றவர்கள் செய்யாத விஷயத்தை செய்வதையோ அல்லது ஒற்றை ஆளாக குடும்ப பொறுப்பை சுமப்பவரையோ தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடி தீர்ப்பர்கள். இந்த பார்மூலா தனது படங்களில் எம்ஜிஆர் கொண்டு வந்தார். அந்த பாணியை பின்பற்றி அவரை போல் மாஸ் ஹீரோவாக ரஜினிகாந்த் உருவெடுக்க படிக்காதவன் படம் முக்கிய காரணமாக அமைந்தது.
வழக்கறிஞராக இருக்கும் சிவாஜியின் சித்தப்பா மகன்களாக சிறுவர்களாக ரஜினியும், அவரது சகோதரர் விஜய் பாபுவும் வருகிறார்கள். அண்ணியின் கொடுமை காரணமாக சிவாஜி வெளியூர் சென்றிருக்கும் போது குடும்பத்தை விட்டு பிரிய நேருகிறது.
தம்பியை வளர்த்து ஆளாக்க சிறுவனான ரஜினி தனது வாழ்க்கையை தியாகம் செய்து உழைக்கிறார். சில திருப்பங்களால் ரஜினியையும், அவரது சகோதரரையும் முஸ்லீமான நாகேஷ் எடுத்து வளர்க்கிறார். நாகேஷுக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் மூத்த அண்ணனாக ரஜினி இருக்கிறார்.
வளர்ந்த பிறகு கார் ட்ரைவராக வரும் ரஜினி வசிக்கும் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கும் பெண்ணாக அம்பிகா வருகிறார். இருவருக்கும் முதலில் மோதல் பின்னர் காதல் மலர்கிறது.
இதற்கிடையே ரஜினியின் தம்பிகளில் ஒருவர் போதை கும்பலிடம் சகாவாசம் வைத்து கொள்கிறார்.இதை கண்டிக்கும் ரஜினியை விட்டு பிரிகிறார். மற்றொரு சகோதரர் பணக்காரர் பூர்னம் விஸ்வநாதன் பெண்ணாண ரம்யா கிருஷ்ணான காதிலிக்கிறார்.
வாழ்க்கைக்கு பணம்தான் முக்கிய என அவரும் ரஜினியை விட்டு பிரிகிறார். நெருக்கமானவர்கள் அனைவரும் பிரிந்து போக சோகத்தில் இருக்கும் ரஜினிக்கு ஆதரவாக அம்பிகா வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தந்தை பூர்ணம் விஸ்வநாதன், அவரது உறவினரான ஜெய்ஷங்கரால் கொல்லப்படுகிறார். இந்த பலி ரஜினி மீது விழுகிறது.
இதற்கிடையே சிவாஜியை ஒரு கட்டத்தில் ரஜினி சந்திக்க நேர்கிறது. அப்போது அவர் தனது அண்ணன் என தெரிந்தபோதிலும் அதை அவரிடம் வெளிக்காட்டாமல் வருவார். இந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினியை மீண்டும் சந்திக்க நேரும் சிவாஜி, அவரிடம் தனி மாரியாதையும் பாசமும் வெளிப்படுத்துவார்.
கொலையாளியாக ரஜினியை நீதிபதியாக இருக்கும் சிவாஜி பார்த்தபின்னர் கலங்கி, அவரை கொலை வழக்கில் இருந்து விடுவிக்க மீண்டும் வழக்கறிஞர் ஆகிறார். தனது வாத திறமையால் உண்மையான கொலையாளி ஜெய்ஷங்கர் தான் என நிருபித்து ரஜினிக்கு விடுதலை வாங்கி தருகிறார். இறுதியில் சகோதரர்கள் ஒன்றிணைவது போல் படம் முடியும்
ஹைலைட்டான இளையாராஜா இசை
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் வெளியாகி இருந்தாலும், இதன் ஜீவ நாடியாக தமிழ் பதிப்பின் இசை அமைந்திருந்தது. இளையராஜா இசையில் பாடல் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் கதையுடன் பயணிக்க வைத்து சிரிக்க வேண்டிய இடத்திலும் சிரிக்கவும், கண்ணீர் சிந்த வேண்டிய இடத்தில் அழவும் வைத்தது.
வைரமுத்து, வாலி, கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியிருப்பார்கள். இதில் வைரமுத்து எழுதிய ஊர தெரிஞ்சுகிட்டேன், ஒரு கூட்டு கிளியாக பாடல் படத்தை என்றென்றும் நினைவை விட்டு நீங்காத வண்ணம் இருந்து வருகிறது.
படத்தில் ஜனகராஜ் மெட்ராஸ் பாஷையில் பேசும் தங்கச்சியா நாய் கடிச்சிடுச்சுப்பா என்கிற காமெடி பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இந்த காட்சியில் ரஜினியே கூட சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மூடியிருப்பார்.
சிறந்த ரீமேக்
பொதுவாகவே ரீமேக் படங்கள் என்றால் வெற்றி என்ற மினிமம் கியாரண்டியுடன் வெளிவரும். ஏனென்றால் வேறு மொழி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி கதை நம் மொழியிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற அடிப்படை விஷயம் என்பதால், ரீமேக் படங்களை அதன் அடிப்படை மாறாமல் ரசிகர்களுக்கு ஏற்ப சிறிய மாற்றங்களுடன் உருவாக்குவார்கள்.
படிக்காதவன் படமும் அப்படியே உருவாக்கியிருந்தாலும், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் காம்போ தங்களது உணர்வுபூர்வமான நடிப்பால் ப்ரஷ் ஆன புதிய கதை போல் உணர வைத்திருப்பார்கள். அந்த வகையில் தமிழில் வெளியாகி வெற்றியை பெற்ற சிறந்த ரீமேக் என்ற படிக்காதவன் படத்தை கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்