47 Years of Avargal: கமலின் காதல், ரஜினியின் சேடிஸம்! இடையை ஊசலாடும் பெண்ணாக சுஜாதா - ரசிகர்கள் மனதை கவர்ந்த அவர்கள்
பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய படங்களில் கருப்பு வெள்ளை சினிமாக்களில் முக்கிய படமாக சுஜாதா பிரதான கதாபாத்திரமாக நடித்திருக்கும் அவர்கள் உள்ளது.
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் சுஜாதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ரவிக்குமார், பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் அவர்கள். வளர்ந்து வரும் ஹீரோக்களாக உருவெடுத்து வந்த ரஜினி, கமல் இணைந்து நடித்த படங்களில் முக்கியமான படமாக இது அமைந்துள்ளது.
ஏனென்றால் இந்த படத்தில் இவர்களின் கதாபாத்திர வடிவமைப்பானது இருவரின் திறமைக்கும் தீனி போடும் விதமாக அமைத்திருப்பார் இயக்குநர் பாலசந்தர். என்னதான் இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் படத்தின் ஆணிவேராக இருப்பவர் சுஜாதா. இதனால் தான் என்னவோ இந்த படத்தின் டைட்டிலில் முதல் பெயராக சுஜாதா பெயர் தோன்றும்.
பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என்று உரக்க இன்று பேசி வரும் காலமாற்றத்துக்கு விதைகளில் ஒன்றாக இந்த படத்தில் வரும் சுஜாதா நடித்திருக்கும் அனு கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முன்னாள் காதலனிடம் அனுமதி கேட்டு சொல்லும் அளவுக்கு இயல்பை வெளிப்படுத்தும் தைரியமாக பெண்ணாக வரும் அனு வாழ்க்கையில் அவரது முன்னாள் காதல், கணவன், தன்னை ஒரு தலையாக காதலிக்கும் நண்பர் என மூன்று ஆண்களால் நிகழும் உணர்ச்சி போராட்டமே அவர்கள் படத்தின் கதை.
சுஜாதா முன்னாள் காதலனாக வரும் ரவிக்குமார், சுஜாதா கணவனாகவும் சேடிஸ்டாகவும் வரும் ரஜினி, சுஜாதாவை ஒரு தலையாக காதலிக்கும் அவரது நண்பராக கமல் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பை முத்திரை பதித்திருப்பார்கள். இவர்களின் உறவுகளுக்கு இடையே ஊசலாடும் பெண்ணாக வரும் சுஜாதா, பெண்களின் சுய விருப்பம், விருப்பு வெறுப்பை கடந்து அவர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக தோன்றியிருப்பார்.
அழுத்தமான காட்சிகளும், திரைக்கதையும் அவர்கள் படத்தை ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது. கூடவே, சரித்திரத்தில் இடம் பெறணும்னா, நாம சந்தோஷமா வாழக் கூடாது, விவாகரத்து ஒரு பரிசு, போன்ற பாலசந்தரின் காலத்தை கடந்த வசனங்கள் எந்த காலத்திலும் பொருந்தக்கூடியவையாக உள்ளது.
படத்தில் கமல்ஹாசன் பொம்மைகளை பேச வைக்கும் வென்ட்ரிலோக்விசம் என்ற கலையை தெரிந்தவராக வந்து சில காட்சிகளில் ரசிக்க வைப்பார். அதேபோல் இந்த படத்தில் வார்த்தைகளற்ற உடல்மொழிக் கலையான மைமும் இடம்பிடித்திருக்கும்.
கண்ணதாசன் பாடல் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. ஜூனியர் ஜூனியர் என்ற பாடல் காலத்தால் அழியாத கிளாசிக் பாடலாக உள்ளது.
பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையாக மட்டுமில்லாமல், பெண் முன்னேற்றம், பெண்களின் உணர்வுகளை எதார்த்தமாக காட்டிய படமாக இருக்கும் அவர்கள் வெளியாகி இன்றுடன் 47 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்