Rajinikanth: பிரபல ஹிந்தி தயாரிப்பாளருடன் கைகோர்த்த ரஜினி - நியூ அப்டேட் இதோ..!
நடிகர் ரஜினிகாந்த் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் உடன் புதிய படம் ஒன்றில் கைகோத்துள்ளார். இந்த விஷயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி இருந்த 'லால் சலாம்' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் பிஸியாக இருக்கிறார். 'ஜெய் பீம்' ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வருகிற இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ரஜினி நடித்து வருகிறார். பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.27) அதிகாலை ஹைதராபாத் கிளம்பிச் சென்ற நிலையில் இப்போது இவரது புதிய பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா உடன் தான் நடிகர் ரஜினி புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை சஜித், ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தபோது எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து உறுதி செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தை வெளியிட்ட சஜித் நாடியாட்வாலா "லெஜென்ட் ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றப் போவது ரொம்பவே பெருமையான விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாகத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்." எனக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 'அந்தா கனூன்' என்ற படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த சில வருடங்களில் அவர் சிறப்புத் தோற்றத்தில்தான் இந்தியில் நடித்திருந்தார். இப்போது அவர் சஜித்துடன் கைகோர்த்திருப்பதால் விரைவில் என்ன படம் யார் இயக்குநர் சிறப்பு தோற்றமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா தயாரிப்பில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், திடீரென தற்போது பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்