தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  12 Years Naan Eee: ஈ ஆக மாறி பழிவாங்கும் ஹீரோ!கொஞ்சம் ரொமான்ஸ்,கொஞ்சம் சாகசம் - இந்திய சினிமாவில் சிறந்த பேண்டஸி படம்

12 Years Naan Eee: ஈ ஆக மாறி பழிவாங்கும் ஹீரோ!கொஞ்சம் ரொமான்ஸ்,கொஞ்சம் சாகசம் - இந்திய சினிமாவில் சிறந்த பேண்டஸி படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 06, 2024 07:45 AM IST

ஈ ஆக மாறி ஹீரோ பழிவாங்கும் கதையாக இருக்கும் நான் ஈ படம் இந்திய சினிமாவில் சிறந்த பேண்டஸி படங்களில் ஒன்றாக உள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படைப்புக்கு நம்பிக்கையும், விதையும் போட்டது.

 ஈ ஆக மாறி பழிவாங்கும் ஹீரோ, இந்திய சினிமாவில் சிறந்த பேண்டஸி படம்
ஈ ஆக மாறி பழிவாங்கும் ஹீரோ, இந்திய சினிமாவில் சிறந்த பேண்டஸி படம்

தெலுங்கு சினிமா பிரமாண்ட இயக்குநரான ராஜமெளலிக்கு தமிழில் என்ட்ரி கார்டாக அமைந்த படம் நான் ஈ. இந்த படத்துக்கு முன்னரே அவர் இயக்கிய மகதீரா படம் மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் நான் ஈ படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கினார்.

பேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியிருந்த நான் ஈ படத்தில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

ஈ மூலம் ஆவியாக வரும ஹீரோ

வில்லனால் கொல்லப்படும் ஹீரோ ஈ உடலில் ஆவியாக புகுந்து வில்லனை பழிவாங்குவது தான் படத்தின் ஒன்லைன். இதை நம்பவைக்கும் விதமாக காட்சியமைப்பில் உருவாக்கி ரசிகர்களை கவர்ந்து வெற்றி கண்டார் இயக்குநர் ராஜமெளலி.

படத்தில் ஈ பிரதான கதாபாத்திரமாக தோன்றும் நிலையில் கிராபிக்ஸில் அச்சு அசலாக அதை உருவாக்கி, அதன் மூலம் மாயஜாலமும் நிகழ்த்தியிருப்பார். டார்க் ஷேட் கொண்ட வில்லனாக வரும் சுதீப், ஈ யிடம் மாட்டிக்கொண்ட படாதபாடு படுபவராக நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஒளிப்பதிவாளராக கே.கே. செந்தில்குமார், இசையமைப்பாளராக கீரவானி என தனது முந்தைய படங்களில் பணியாற்றிய டீமை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக நான் ஈ அமைந்திருந்தது. இதன் தமிழ் பதிப்புக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தார். அதேபோல் தமிழ் பதிப்பில் சந்தானமும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

விருதுகளை அள்ளிய நான் ஈ

தெலுங்கில் இந்த படம் ஈகா என்ற பெயரில் வெளியான நிலையில், சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கான தேசிய விருதை வென்றது. அத்துடன் சிறந்த தெலுங்கு படம், தெலுங்கு இயக்குநர், தெலுங்கு நடிகை, தெலுங்கு துணை நடிகர் என ஐந்து விருதுகளை வென்றது.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாத விதத்தில் திரைக்கதையும், காட்சி அமைப்புகளையும் கொண்ட நான் ஈ படத்தில் காமெடி, காதல், ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களும் இடம்பிடித்திருக்கும்.

பாடல்கள், பின்னணி இசை ஹிட்

தமிழில் மரகதமணி என்று அறியப்பட்ட இசையமைப்பாளர் கீரவாணி இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. பாடல்களின் காட்சியமைப்பும் வெகுவாக கவர்ந்தன. தமிழுக்கான பாடல்களை மதன் கார்க்கி எழுதினார். அதேபோல் படத்தின் பின்னணி இசையும் காட்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் விதமாக அமைந்திருந்தன

ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்

நான் ஈ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 1,100 திரையரங்குகளில் வெளியானது. மாஸ் நடிகர்கள் யாரும் இல்லாத நிலையிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய இந்த படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்தது.

சொல்லப்போனால் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் படங்களை உருவாக்கி பான் இந்தியா திரைப்படமாக வெளியிடுவதற்கான கதவுகளை விசாலமாக்கியது இந்த படம். நான் ஈ ரிலீசுக்கு பின் இதே பாணியில் ஒரே நேரத்தில் பல மொழிகளில் படங்களை வெளியிடும் போக்கு அதிகரித்தது. பாகுபலி என்ற பிரமாண்ட படைப்பு உருவாவதற்கு விதையாக இருந்தது நான் ஈ படத்தின் ஹிட் தான். இந்தியாவில் வெளியான ஜனரஞ்சக பேண்டஸி த்ரில்லர் படமாக இருந்து வரும் நான் ஈ வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.