Raja Chinna Roja : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா? - குழந்தைகளை குஷிப்படுத்திய ‘ராஜா சின்ன ரோஜா’
Raja Chinna Roja : 34 ஆண்டுகளை கடந்து நம் நினைவில் நிற்கிறது ராஜா சின்ன ரோஜா படம். குழந்தைகள் நிறைந்த படம், குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம். அப்போது நல்ல விமர்சனத்தை பெற்ற குடும்ப படம். அந்தப்படம் வெளியான நாளில் அந்தப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் அரிதினும் அரிதுதான். அதில் முக்கியமான படம் ராஜா சின்ன ரோஜா திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் பி. முத்துராமன் இயக்கினார். ஏவிஎம் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்திருந்தது.
ரஜினிகாந்த், கவுதமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தின் கதை, ராஜா (ரஜினிகாந்த்) சினிமா நடிகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்ணை வருவார். சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டு, உஷா (கவுதமி) வீட்டில் தங்கியிருப்பார். அப்போது ராஜாவும், உஷாவும் காதலில் ஈடுபடுவார்கள். ராஜாவின் நண்பர் ரகுவரன், அவரது மாமா, நகரிலே பெரும் பணக்காரர் மற்றும் பிஸினஸ் மேன்.
அவருக்கு 5 குழந்தைகள் இருப்பார்கள். அவரது மனைவி இறந்துவிடவே, வீட்டை, ரகுவரனையும், வேலைக்காரர்களையும் வைத்து நிர்வகித்து வருவார். யாரும் கவனிக்க ஆள் இல்லாமல் சில குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்களின்றி கெட்டு குட்டிச்சுவராகியிருப்பார்கள்.
அப்போது அந்த வீட்டிற்கு வரும் அந்த பணக்காரரின் மாமா, குடும்பத்தின் நிலையை பார்த்து அவருக்கு தெரிந்தவர் ஒருவரை அனுப்புவதாக கூறிவிட்டுச் சென்று, ஒருவரை அனுப்பி வைப்பார். அவரை வீட்டில் இருந்தவர்கள், தங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார் என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள்.
அதற்கு பதிலாக ராஜாவை எதிர்பாராதவிதமாக ரகுவரன் அவரை அந்த நபர்போல் நடிக்க அழைத்து வருவார். முதலில் எதற்கு என்று தெரியாத ராஜாவும் அங்கு செல்வார். இது ஏமாற்று வேலை என்று தெரிந்தவுடன் திரும்ப நினைப்பார். ஆனால் ரகுவரன் தடுக்கவே வேறு வழியின்றி தங்கவைக்க நிர்பந்திக்கப்படுவார்.
ஆனால் அது அந்த குடும்பத்திற்கு நன்மையாக அமையும். அவர் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை நல்வழிபடுத்த முயல்வார். துவக்கத்தில் அடம்பிடிக்கும் குழந்தைகள் ஒவ்வொருவராக வழிக்கு வருவார்கள். பிரச்னைகளின் உச்ச் கட்டமாக அந்த குடும்பத்தின் மூத்த பெண், போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பார். அதை கண்டுபிடித்து, அவரை நல்வழிப்படுத்தி, அந்த போதை கும்பலையும் பிடித்து போலீசில் ஒப்படைப்பார்.
இந்தப்படத்தில், ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தாராம் பாடல் அந்த காலத்திலே காட்டு விலங்குகளை வைத்து அனிமேஷன் செய்யப்பட்டிருக்கும். அது குழந்தைகளுக்கு கருத்து சொல்லும் பாடலாகவும் இருக்கும். குழந்தைகள் படத்துக்கு பொருத்தமான பாடல். இந்தப்படத்தில் மற்றொரு பிரபலமான பாடல் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்னக்குழந்தையும் சொல்லும் என்ற பாடல் ஆகும். இந்தப்படத்தில் நல்ல குழந்தை கதாபாத்திரத்தில் பேபி ஷாம்லி நடித்திருப்பார்.
மற்ற குழந்தைகள் அனைத்தும் வம்பு செய்யும், வாலு குழந்தைகளாக காட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் இறுதியில் ராஜாவில் அன்பில் அனைவரும் நல்ல குழந்தைகளாகிவிடுவார்கள். 34 ஆண்டுகளுக்கு முன் நம்மையெல்லாம் குஷிப்படுத்திய திரைப்படம் இன்றும் நினைக்கும்போது அதே குஷி மனநிலையில் கொண்டு சேர்ப்பது இந்த படத்தின் வெற்றி. ரஜிக்கு குழந்தைகள் மத்தியில் இருந்த நல்ல பெயரை உயர்த்தியது இந்தப்படம்.
டாபிக்ஸ்