Surya Vamsam:‘’சூரிய வம்ச கலெக்டர் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் ‘’- சரத் குமார் பேட்டி
சூரிய வம்ச கலெக்டர் போல, என் மனைவி ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என சரத் குமார் பேட்டியளித்துள்ளார்.

Surya Vamsam: மக்களவைத் தேர்தல்: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத் குமார், தனது கணவர் சரத் குமாருடன் மதுரை விமானநிலையத்துக்கு வந்தார். அதன்பின் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய சரத் குமார், சூர்யவம்சத்தில் மனைவியை கலெக்டர் ஆக்கும் நாயகன்போல், என் மனைவியை எம்.பி.ஆக்குவேன் என்று சூளுரைத்தார்.
அப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன்பு, ராதிகா சரத் குமார் மற்றும் சரத் குமார் ஆகிய இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ‘’முதலில் வேலைசெய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு, அப்புறம் உணவு, அதன்பின் இருக்கும் இடம் அதை முன்னிலைப் படுத்திதான் நாங்கள் செயல்படுவோம். அது முதலில் வந்து சேர்வோம்.
பிரதமர் மோடிஜி அவர்கள் எத்தனையோ விஷயங்கள் நாட்டுக்கு செய்திருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துசேரவில்லை. அது வந்து சேர்வதற்கு நாங்கள் நிச்சயமாகப் பாடுபடுவோம்’’ என்றார், ராதிகா சரத்குமார்.